டோன்பாஸ் பகுதியை ரஷ்யாவிடம் விட்டுக் கொடுக்க முடியாது – ட்ரம்ப் திட்டவட்டம்

உக்ரைனின் கிழக்கு டோன்பாஸ் பிராந்தியத்தை ரஷ்யாவிடம் விட்டுக் கொடுப்பது குறித்து தான் எந்தவிதமான கலந்துரையாடலையும் மேற்கொள்ளவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கியை (Volodymyr Zelenskyy) சந்தித்த பின்னர் இதனைத் தெரிவித்துள்ளார்.
டோன்பாஸ் பிராந்தியம் தற்போது உள்ள நிலையிலேயே இருக்க வேண்டும் என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இரு நாடுகளும் நிலப்பரப்புகளை கையகப்படுத்தும் முயற்சியை கைவிட்டு இராணுவத்தினரை மீள அழைக்க வேண்டும் என ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
இந்தச் சந்திப்பின் பின்னர் கருத்துத் தெரிவித்த ஜெலென்ஸ்கி, ரஷ்யாவை சமாதானப்படுத்த வேண்டாம் என நட்பு நாடுகளைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் (Vladimir Putin) மீது அமெரிக்கா கடுமையான அழுத்தம் கொடுக்கும் என தாம் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, டோன்பாஸ் பிராந்தியத்தின் சுமார் 78 சதவீதப் பகுதிகள் தற்போது ரஷ்யாவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.