சர்வதேச அளவில் உயரும் தங்கத்தின் விலை – தங்கக் காசுகளை வாங்கி குவிக்கும் இந்தியர்கள்
சர்வதேச ரீதியில் தங்கத்தின் விலை அதிகரித்து வரும் சூழ்நிலையில், இந்திய மக்கள் தங்கக் கட்டிகள் மற்றும் தங்கக் காசுகள் மீதான கவனத்தை செலுத்தி வருகின்றனர்.
இந்தியாவில் தீபாவளி பண்டிகைக் காலங்களில் தங்கம் வாங்குவது பாரம்பரியமாக செல்வச் செழிப்பை ஏற்படுத்தும் என மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
இவ்வாறான பண்டிகை நேரங்களில், முதலீட்டு நோக்கத்துடன் தங்கம் வாங்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
ஆனால் தங்கத்தின் விலை தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டிக் கொண்டிருப்பதால், பொதுமக்கள் தங்க நகைகளுக்கு பதிலாக தங்கக் காசுகள் மற்றும் தங்கக் கட்டிகளை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சர்வதேச சந்தை நிலவரத்திற்கமைய, இந்த வாரத்தில் இந்தியாவில் தங்கம் உள்நாட்டு விலையைவிட அதிக விலையில் விற்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
விலை அதிகரித்த காரணத்தால், இந்த ஆண்டு தங்க விற்பனை சுமார் 10 முதல் 15 சதவீதம் குறைந்துள்ளது.
சர்வதேச ரீதியில் அதிகளவில் தங்க நகைகள் வாங்கும் நாடுகளில், இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கின்றது. இந்த பட்டியலில் முதலிடத்தில் சீனா காணப்படுகின்றது.
தங்கத்தின் தேவை தொடர்ந்து நிலைத்திருக்க, சில நகை விற்பனை நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் பல சலுகைகளை வழங்கி வருகின்றன.
விலை உயரும் போதிலும், தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடு என பல இந்தியர்கள் கருதுகின்றனர்.





