”தோடுகளை விற்றேன், எனது கனவும் கலைந்தது” : வாக்குமூலம் வழங்கிய செவ்வந்தி!

நேபாளத்தில் தங்கி இருந்த காலகட்டத்தில் தனக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டதாகவும், கடைசியில் தனது தோடுகளைக்கூட விற்கவேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் இஷாரா செவ்வந்தி தெரிவித்துள்ளார்.
பொலிஸ் விசாரணையின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளாரென சிங்கள வார இதழொன்றில் வெளியாகியுள்ள கட்டுரையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கட்டுரையில், “அளுத்கடை நீதிமன்றத்துக்குள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட கனேமுல்ல சஞ்ஜீவவை கொலை செய்வதற்குரிய ஒப்பந்தத்தை, அப்போது வெளிநாட்டில் பதுங்கி இருந்த பாதாள குழு உறுப்பினர் கெஹேல்பத்தர பத்மே என்பவரே செவ்வந்திக்கு வழங்கி இருந்தார்.
சம்பவத்துக்கு பிறகு செவ்வந்தியை வெளிநாட்டுக்கு அனுப்புதல், அவருக்கான செலவு உட்பட அனைத்து செலவுகளையும் கெஹேல்பத்தர பத்மேயே கவனித்து வந்துள்ளார்.
எனினும், அவர் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட பின்னரே செவ்வந்திக்கு தலையிடி ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அறைக்குள் முடங்கி இருப்பதால் விரக்தியில் காணப்பட்ட செவ்வந்திக்கு, பத்மேவின் கைது மரண செய்தியாகவே அமைந்தது.
பத்மே அண்ணா, கைது செய்யப்பட்ட பின்னர் நான் முழு நம்பிக்கையையும் இழந்துவிட்டேன். வாழ்வதற்கு வழி இன்றி பரிதவித்தேன். சாப்பிடுவதற்குகூட காசு இருக்கவில்லை. கடையில் எனது தோடுகளை விற்றேன். இலங்கை பணத்தில் 75 ஆயிரம் ரூபா கிடைக்கப்பெற்றது. மிகவும் கவனமாக அதனை செலவளித்தேன்.
ஐரோப்பா சென்று சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கு திட்டமிட்டிருந்த செவ்வந்தியின் கனவு, பத்மே கைது செய்யப்பட்ட பின்னர் கலைந்தது” எனத் தெரிவித்துள்ளார்.