இஷாரா செவ்வந்தியை மத்துகமவிற்கு அழைத்துச் சென்ற குற்றப்பிரிவு அதிகாரிகள்
நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட இஷாரா செவ்வந்தியிடம் இருந்து பல தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான சூழலில், கணேமுல்ல சஞ்சீவவை கொலை செய்துவிட்டு நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதற்கு முன்பு மறைந்திருந்ததாக கூறப்படும் மத்துகம பகுதிக்கு இஷாரா நேற்று அழைத்து செல்லப்பட்டார்.
மேலும், அவர் மித்தேனியா பகுதியில் மறைந்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பின்னர் அவர் கிளிநொச்சிக்கு சென்று, அங்கிருந்து யாழ்ப்பாணம் செல்வதற்கு முன்பு அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பல நாட்கள் ஒளிந்திருந்தார்.
அங்கிருந்து, ஒரு டிங்கி படகு உதவியுடன் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றுள்ளார்.
இதேவேளை குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி உட்பட 6 சந்தேக நபர்களையும் 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
நேபாளத்தின் பக்தபூர் மாவட்டத்தில் உள்ள திப்போஸ் பூங்கா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மறைந்திருந்தபோது கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி உட்பட ஆறு பேர் நேற்று பிற்பகல் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.
இஷாராவை தவிர, நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட குழுவில் யாழ்ப்பாண சுரேஷ், ஜே.கே. பாய் மற்றும் நாட்டை விட்டு வெளியேற அவருக்கு உதவிய கெஹல்பத்தர பத்மே ஆகியோரின் குற்றவியல் வலையமைப்பில் தொடர்புடைய கம்பஹா பாபா, நுகேகோடா பாபி மற்றும் தக்சி ஆகியோரும் அடங்குவர்.





