8000 நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து
கண்டி தேசிய வைத்தியசாலையில் பொருத்தப்பட்டுள்ள இரண்டு இருதய வடிகுழாய் இயந்திரங்களில் ஒன்று கடந்த 06 ஆம் திகதி முதல் முழுமையாக பழுதடைந்துள்ளது.
இதன் காரணமாக இருதய நோயைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்காக காத்திருப்போர் பட்டியலில் காத்திருக்கும் சுமார் 8,000 நோயாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதய வடிகுழாய் அலகு இதயத்திற்கு இரத்தத்தை வழங்கும் கரோனரி தமனிகளில் அடைப்புகளைக் கண்டறிதல், அதற்கான ஸ்டென்ட் சிகிச்சைகள் மற்றும் இதயத் துளைகளைக் கண்டறிதல் மற்றும் சிகிச்சை செய்தல் உள்ளிட்ட பல நோயறிதல் மற்றும் சிகிச்சைகளை செய்கிறது.
அதற்காகப் பயன்படுத்தப்படும் 14 இதய வடிகுழாய் இயந்திரங்கள் நாடளாவிய ரீதியில் உள்ள 11 வைத்தியசாலைகளில் நிறுவப்பட்டுள்ளன, அவற்றில் 2 கண்டி தேசிய வைத்தியசாலையில் உள்ளன.
எனினும் 2006 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இயந்திரம் கடந்த 06 ஆம் திகதி முதல் முழுமையாக பழுதடைந்துள்ளது.
அத்துடன் கண்டி தேசிய வைத்தியசாலையின் கதிரியக்க சிகிச்சை பிரிவில் பொருத்தப்பட்டுள்ள 2 அதிநவீன புற்று நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் 2 அதிநவீன இயந்திரங்கள் கடந்த வருடம் நவம்பர் மாதம் முதல் பழுதடைந்துள்ள கட்டிடத்தின் குளிரூட்டும் முறைமையும் சரி செய்யப்படவில்லை.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் உள்ள பல வைத்தியசாலைகளில் கதிரியக்க சிகிச்சைப் பிரிவுகள், ஆய்வகப் பரிசோதனைகள் மற்றும் சிறுநீரகச் செயற்பாட்டுப் பிரிவுகள் முடங்கியுள்ளதாக சுகாதார வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், அரசு மருத்துவமனைகளில் வெளிநோயாளிகள் சிகிச்சை பிரிவுக்கு வரும் நோயாளிகள், தனியார் மருந்தகங்களில் சில மருந்துகளை பெற வேண்டியுள்ளதால், சிரமப்படுகின்றனர்.
இவ்வாறானதொரு பின்னணியில் இன்னும் 150 முதல் 200 வகையான அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார நிபுணர் சங்கங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, டொலரின் விலை வீழ்ச்சியுடன் ஒப்பிடும் போது, மருந்துகளின் விலையை மிக விரைவாக குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி, டொலரின் விலை குறைவதை விட மருந்துகளின் விலை குறைந்தது 15 வீதத்தால் குறைய வேண்டுமென அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில், அத்தியாவசிய மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அடுத்த வருடம் மார்ச் 31 ஆம் திகதி வரையில் பாரத ஸ்டேட் வங்கியின் 1,000 மில்லியன் அமெரிக்க டொலர் உதவித் திட்டத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்க ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.