சிங்கப்பூரில் காதலிக்காக நாடகமாடிய நபருக்கு கிடைத்த தண்டனை
சிங்கப்பூரில், தனது காதலியை பணிப்பெண் எனக் காண்பித்து வேலைக்கு அமர்த்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
45 வயதுடைய பைசல் பாரிட் (Faizal Farid) என்ற நபருக்கு 3 வாரங்களுக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவர், வேலை அனுமதி தொடர்பான விவரங்களில் பொய் கூறிய குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். மேலும், மற்றொரு குற்றச்சாட்டு கருத்தில் கொள்ளப்பட்டது.
2021ஆம் ஆண்டு முதல் பைசலும் பிலிப்பீன்ஸைச் சேர்ந்த 37 வயது சொட்டோ ஜென்னி வில்லரோனும் (Sotto Jennie Villaron) காதலித்து வந்துள்ளனர்.
ஜென்னி அந்த நேரத்தில் சிங்கப்பூரில் வெளிநாட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றியுள்ளார்.
ஆனால் 2024ஆம் ஆண்டு, அவர் தனது வேலை வாய்ப்பை இழந்தார். சிங்கப்பூரில் தொடர்ந்து வசிக்க வேண்டும் என்ற விருப்பத்துடன், தனது வேலை அனுமதியை பைசல் பாரிடின் பெயரில் மாற்றிக்கொள்ள ஜென்னி முயற்சி செய்தார்.
பைசல் இதற்காக ஒப்புதல் வழங்கியதோடு, ஜென்னி புதிய வேலை அனுமதியையும் பெற்றார். இதையடுத்து, ஜென்னி சுமார் நான்கு மாதங்களுக்கு பைசலின் வீட்டில் அவரது காதலியாக வசித்தார்.
இதற்கிடையில், அவர் வேறொரு வீட்டில் பகுதி நேரப் பணி செய்தார். இந்த மோசடியைத் தொடர்ந்து, கடந்த மாதம் ஜென்னிக்கும் 3 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.





