கரூர் துயரம் சம்பவம் – 41 குடும்பங்களையும் தத்தெடுக்கும் விஜய்!
கரூர் சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து கருத்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கரூரில் உயிரிழந்த 41 குடும்பங்களையும் தத்தெடுக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
கரூரில் உயிரிழந்த எங்கள் உறவுகளின் குடும்பங்களுடன் எங்கள் பயணம் எப்போதும் தொடரும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் எத்தனை சோதனைகள் வந்தாலும், எத்தகைய அதிகார வலிமையை எதிர்கொண்டாலும், எத்தனை போராட்டங்களைச் சந்தித்தாலும் நீதியை நிலைநாட்டத் தொடர்ந்து பாடுபடுவோம்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தின் கரூர் பகுதியில் இடம்பெற்ற தமிழக வெற்றிக் கழக்கத்தின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்திருந்தனர். அத்துடன் பலர் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இந்த கூட்ட நெரிசலில் தமிழக வெற்றிக் கழகத்தினர் ஆளுங்கட்சி மீதும், ஆளும் கட்சியினர் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகத் திறமை மீதும் கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.
களத்தில் இருந்த பெரும்பாலான மக்கள் தி.மு.க அரசாங்கத்தின் மீது பல குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருந்தனர். குறிப்பாக காவல்துறை தரப்பில் 500 பொலிஸார் பணியமர்த்தப்பட்டதாக குறிப்பிட்டிருந்தாலும், உண்மையில் 50 பொலிஸார் கூட களத்தில் இருக்கவில்லை என்ற குற்றச்சாட்டை பலரும் முன்வைத்திருந்தனர்.
மிகவும் குறுகிய இடத்தில் இடம் ஒதுக்கப்பட்டமை குறித்து பலரும் விமர்சித்திருந்தனர். அத்துடன் இரவோடு இரவாக மேற்கொள்ளப்பட்ட உடற்கூராய்வு பரிசோதனை ஆளும் கட்சியினர் மீது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது.
இதற்கிடையில் இந்த சம்பவம் தொடர்பில் தமிழக அரசு சார்பில் நியமிக்கப்பட்டிருந்த சிறப்பு புலனாய்வு குழு ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயற்படுவதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது. அத்துடன் மதுரைக்கிளையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டிய வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றியிருந்ததும் விமர்சனங்களை கொண்டுவந்திருந்தது.
இவை எல்லாவற்றையும் விட உயர்நீதிமன்ற நீதிபதி விஜயின் நிர்வாக திறமையை கடுமையாக விமர்சித்திருந்தார். அத்துடன் அவர்களின் பிரச்சார வாகனத்தையும் பறிமுதல் செய்ய உத்தரவிட்டிருந்தார்.
இவ்வாறான சூழலில் இனியும் சிறப்பு புலனாய்வின் விசாரணைகளை ஏற்க முடியாது என கூறிய தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
குறித்த மனுமீதான விசாரணை கடந்த மூன்று நாட்களாக இடம்பெற்ற நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.





