அண்டார்டிகா கடற்பகுதியில் இருந்து வெளியேறும் ஆபத்தான நச்சு வாயு!
அண்டார்டிகா கடலோரப் பகுதியின் விரிசல்களில் இருந்து மிகவும் சக்திவாய்ந்த பசுமை இல்ல வாயு வெளியேறுவது கண்டறியப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நேச்சர் கம்யூனிகேஷன்ஸில் ( Nature Communications)வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கையின்படி, இப்பகுதி முன்னெப்போதும் இல்லாத விகிதத்தில் வெப்பமடைவதால், கடற்பரப்பில் உள்ள பிளவுகளில் இருந்து மீத்தேன் வாயு அதிக விகிதத்தில் வெளியேறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகெங்கிலும் கடல் தளங்களுக்கு அடியில் ஒரு பெரிய மீத்தேன் நீர்த்தேக்கம் உள்ளதாகவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அண்டார்டிகாவின் ராஸ் கடலின் கடற்பரப்பில் கண்ணிற்கு புலப்படாத வகையில் இந்த வாயு வெளியேறி வருவதை உணர முடியும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் அதிக ஆபத்தை ஏற்படுத்தும் இந்த மீதேன் வாயுவை சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் சூப்பர் மாசுபடுத்தி என வகைப்படுத்தியுள்ளது.
இந்த வாயுவானது புவி வெப்பமடைதலில் மூன்றில் ஒரு பங்கு வகிக்கிறது. அதேபோல் கார்பன் டை ஆக்சைடை விட புவி வெப்பமடைதலுக்கு 25 மடங்கு அதிக சக்தி வாய்ந்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த காலங்களிலும் குறித்த கடற்பகுதியில் மீதேன் கசிவுகள் காணப்பட்டதாக குறிப்பிட்டுள்ள ஆய்வாளர்கள் தற்போது அதன் வெளியேற்றம் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.





