அஜர்பைஜான் விமான விபத்துக்கு இழப்பீடு வழங்க தேவையான அனைத்தையும் ரஷ்யா செய்யும்: புடின்

கடந்த 2024 டிசம்பர் 25 அன்று, பாகுவிலிருந்து குரோஸ்னிக்குச் சென்ற அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம், கஜகஸ்தானின் அக்தாவுக்கு அருகே விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விமானிகள் உட்பட 38 பேர் உயிரிழந்தனர்.
ரஷ்யாவின் தாக்குதலில் விமானம் சேதமடைந்ததால், அவசரமாக தரையிறக்க முயன்றதில், விபத்து ஏற்பட்டதாக அஜர்பைஜான் அதிகாரிகள் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில் ரஷ்யாவின் விமானத் தற்காப்பு அமைப்பே அஜர்பைஜான் பயணிகள் விமானத்தை தவறுதலாக தாக்கியதாக ரஷ்ய ஜனாதிபதி புடின் ஒப்புக்கொண்டுள்ளார்.
தஜிகிஸ்தான் நாட்டில் நடைபெறும் முன்னாள் சோவியத் நாடுகளின் மாநாட்டில், அஜர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவ் உடன் சந்திப்பில், விமான விபத்துக்கு வான் பாதுகாப்பு அமைப்புகள்தான் காரணம் என ஒப்புக்கொண்ட புடின் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.
இந்த விபத்து தொடர்பாக ரஷ்யாவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றங்களில் வழக்குத் தொடர அஜர்பைஜான் தயாராகி வருவதாக அலியேவ் கடந்த ஜூலையில் அறிவித்திருந்தார்.