இலங்கையில் விபத்தில் உயிரிழந்த மனைவியின் நினைவு நாளில் கணவரும் உயிரிழப்பு
அனுராதபுரத்தில் இருந்து பதுளைக்குத் திரும்பிக்கொண்டிருந்த வேன் ஒன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்ததுடன், 10 பேர் காயமடைந்தனர்.
உயிரிழந்த பெண்ணின் கணவரும் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் 7வது நினைவு நாள் அன்று சிகிச்சை பலனின்றி கணவர் உயிரிழந்ததாக பதுளை காவல்துறையினர் தெரிவித்தனர்.
பதுளை, ரிதீபன, அப்லேண்ட் பகுதியைச் சேர்ந்த தம்பதியினரான 63 வயதுடைய தர்மசேன மற்றும் 52 வயதான ரஞ்சலி பிரணீதா ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பதுளையிலிருந்து அனுராதபுரத்திற்கு யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த வேன், மஹியங்கனையில் உள்ள கிராந்துருகோட்டே செல்லும் பிரதான வீதியில் விபத்திற்குள்ளானது.
விபத்தில் காயமடைந்த வேன் ஓட்டுநர் மற்றும் இருவர் பதுளை போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
விபத்தில் வேன் பலத்த சேதமடைந்தது. விபத்து நடந்த நேரத்தில் வேனில் 11 பேர் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.





