இலங்கை தொடர்பில் ஐநாவில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 60வது கூட்டத்தொடர் இடம்பெற்று வருகின்ற நிலையில் இலங்கை தொடர்பாக இன்று 6ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல் எனும் தலைப்பில் பிரிட்டன் தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் கடந்த மாத ஆரம்பத்தில் இந்த பிரேரணையின் முதலாவது வரைவு சமர்ப்பிக்கப்பட்டதுடன் அதில் பல திருத்தங்கள் செய்யப்பட்டன.
இந்நிலையில் திருத்தப்பட்ட இறுதி வரைவு இன்றைய தினம் 06ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டு இன்றைய தினமே வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.
இலங்கை மீதான மனித உரிமைகள் உயர் ஆணையாளர் அலுவலகத்தின் அதிகாரத்தை நீடிக்கும் தீர்மானத்திற்கு அதனை இன்று முன்வைத்த பிரதான ஐந்து நாடுகளுக்கும் மேலாக மேலும் 22 நாடுகள் இணை அனுசரணை வழங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
மேலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 60ஆவது கூட்டத்தொடர் செப்டம்பர் 8ஆம் திகதி ஆரம்பமான நிலையில் ஒக்டோபர் மாதம் 08ஆம் திகதியுடன் நிறைவடைகின்ற நிலையில் இன்றைய தினம் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.





