விஜய்யின் பிரச்சார பேருந்தை பறிமுதல் செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு
விஜய் தலைமையில் கரூரில் நடந்த பொதுக்கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த கூட்டத்தை கட்டுப்படுத்துவதில் ஏற்பட்ட குறைப்பாடுகளே இந்த அசம்பாவிதத்திற்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கரூர் மாவட்ட சம்பவம் குறித்து விசாரிக்க, சிறப்புப் புலனாய்வுக் குழுவை சென்னை உயர் நீதிமன்றம் அமைத்தது. இது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் உடனடியாக சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்குமாறு கரூர் பொலிஸ் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் வகுக்கப்படும் வரை, மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் அரசியல் பேரணிகள், வாகனப் பேரணிகள் மற்றும் அதுபோன்ற பொது நிகழ்வுகளை நடத்தவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சமீபத்திய கரூர் நெரிசல் போன்ற சம்பவங்களைத் தடுக்க, பெருந்திரளான கூட்டங்களுக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை வகுக்கக் கோரிய நான்கு பொதுநல மனுக்களை விசாரித்தபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் இறுதி செய்யப்படும் வரை, ஒதுக்கப்பட்ட இடங்களைத் தவிர, மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் எந்தக் கூட்டங்களுக்கும் அனுமதிக்கப்படாது என்று அரசும் நீதிமன்றத்தில் உறுதியளித்தது.

இந்த நிலையில், விபத்து ஏற்படுத்தியது தொடர்பாக விஜய்யின் பிரச்சார பேருந்தை Hit and Run வழக்கில் பறிமுதல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரச்சார பேருந்தை பறிமுதல் செய்து, அதில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இதனால் வழக்குப் பதிவு செய்து தவெக-வின் பனையூர் அலுவலகத்தில் உள்ள பிரச்சார பேருந்தை பறிமுதல் செய்ய பொலிஸார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.






