இந்தியா – உத்தரபிரதேசத்தில் மனிதர்களை இனி கடித்தால் தெருநாய்களுக்கு ஆயுள் தண்டனை

நாடு முழுவதும் சுற்றித்திரியும் தெருநாய்களுக்கு எதிராக எத்தகைய நடவடிக்கையை எடுப்பது என்பது தொடர்பில் பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன.
இந்நிலையில், மனிதர்களைக் கடிக்கும் தெருநாய்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில அரசு முடிவுசெய்துள்ளது.
மற்ற மாநிலங்களைப் போலவே உத்தரப் பிரதேசத்திலும் நாய்க்கடியால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்குத் தெருவில் சுற்றித்திரியும் நாய்கள், யாரேனும் ஒருவரை முதன்முறையாகக் கடித்துவிட்டால், அந்நாய்க்குக் கருத்தடை செய்யப்பட்டு கண்காணிக்கப்படும். இதற்காக அதன் உடலில் நுண்சில்லு (மைக்ரோ சிப்) பொருத்தப்படும்.
ஒருவேளை, அது மீண்டும் மனிதர்களைத் துரத்தித் தாக்கிக் கடித்தால், உடனடியாகச் சிறைபிடிக்கப்பட்டு, காப்பகத்தில் அடைக்கப்படும். அதன்பின்னர், வாழ்நாள் முழுமைக்கும் அது வெளியே விடப்படாது.
அதேவேளையில், யாரேனும் ஒருவர் தெருநாய்கள் மீது கற்கள் அல்லது கனமான பொருள்களைத் தூக்கி வீசி, தாக்குதல் நடத்தினால், அதற்கு பதிலடியாக நாய்கள் மனிதர்களைத் தாக்கினால், அக்குறிப்பிட்ட சம்பவம் நாய்க்கடிப் புகாராக பதிவுசெய்யப்படாது.
மூர்க்கமாக உள்ள நாய்களை அடையாளம் காண்பது, வெறிநாய்க்கடி தடுப்பூசி போடுவது, தானாக முதன்முறை மனிதர்களைக் கடித்ததா என்பதைக் கண்காணிக்க கால்நடை மருத்துவரைக் கொண்ட குழுக்கள் அமைக்கப்படும் என்றும் உத்தரப் பிரதேச மாநில முதன்மைச் செயலாளர் அம்ரித் அபிஜத் தெரிவித்துள்ளார்.
இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.