ஆண்டு இறுதிக்குள் ஒப்பந்தத்தை எட்டுவதை நோக்கமாகக் கொண்டு முக்கிய கட்டத்தில் இந்தியா,EU வர்த்தகப் பேச்சுவார்த்தைகள்

இந்தியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுகள் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளன.
பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள இருதரப்புப் பிரதிநிதிகளும், தாராள வர்த்தக உடன்பாட்டை ஆண்டிறுதிக்குள் ஏற்படுத்த வேண்டும் என்ற இலக்கை நோக்கி மும்முரமாகச் செயல்பட்டு வருவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இந்தியாவின் ஆகப் பெரிய சரக்கு வர்த்தகப் பங்காளியாக ஐரோப்பிய ஒன்றியம் விளங்குகிறது.2023-24 நிதி ஆண்டில் இருதரப்பு வர்த்தகம் 137.5 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியது.
கடந்த பத்தாண்டு காலத்தில் இரண்டுக்கும் இடையிலான வர்த்தகம் கிட்டத்தட்ட 90% வளர்ந்துள்ளது.அதனை மேலும் அதிகரிக்கும் நோக்கில் புதிய தாராள வர்த்தக உடன்பாட்டை ஏற்படுத்த இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் முயன்று வருகின்றன.
ஆண்டிறுதிக்குள் உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தகப் பிரிவுத் தலைவர் மாரோஸ் செஃப்கோவிக் கூறியுள்ளார்.
இருதரப்பும் பலனடையும் விதத்தில் முதலீடுகளைத் திறந்துவிடுவது, முதலீட்டில் காணப்படும் இடையூறுகளைக் குறைப்பது, சந்தைத் தொடர்புகளை விரிவாக்குவது, விநியோகத் தொடர்புகளை மேம்படுத்துவது போன்ற அம்சங்கள் உடன்பாட்டில் இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.ஐரோப்பிய வேளாண்துறை ஆணையர் கிறிஸ்டோஃபி ஹான்சென் ஏற்கெனவே டெல்லி சென்றுள்ளார். அவருடன் தற்போது செஃகோவிக்கும் இணைந்துள்ளார்.
வேளாண் மற்றும் பால்பொருள் பண்ணை வர்த்தகத்தில் நிலவும் கருத்துவேறுபாடுகள், வரியுடன் சம்பந்தப்படாத தடைகள் போன்றவை தொடர்பான பேச்சுவார்த்தையில் இவ்வாரம் கிறிஸ்டோஃபி ஈடுபடுவார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுகள் குறிப்பிட்ட சில காலத்திற்குப் பின்னரும் கடந்த 2022ஆம் ஆண்டு மீண்டும் தொடங்கின.அமெரிக்க அதிபராக டோனல்ட் டிரம்ப் மீண்டும் தேர்ந்து எடுக்கப்பட்ட பின்னர் அந்தப் பேச்சுவார்த்தைகள் வேகமடைந்து வருகின்றன.