சிறுவர்கள் குற்றச்செயலில், ஈடுபடுவதையோ, துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுவதையோ ஊடகம் முன் பகிரங்கப்படுத்தக் கூடாது என வலியுறுத்தல்!
பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட சிறுவர்களை ஊடகங்கள் மூலம் அம்பலப்படுத்துவதால் பல சமூகப் பிரச்சினைகள் தோன்றியுள்ளதாகவும், எனவே அதனைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் நாடாளுமன்ற சிறுவர் பேரவையின் தலைவர் எம்.பி ரோஹினி குமாரி விஜேரத்ன வலியுறுத்தியுள்ளார்.
அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய சிறுவர்களுக்கான பாராளுமன்ற பேரவையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடும் சிறுவர்களின் அடையாளங்களை ஊடகங்கள் ஊடாக வெளிக்கொணருவது சம்பந்தப்பட்ட சிறுவர்களின் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக பாராளுமன்ற உறுப்பினர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால் அவர்களை ஊடகங்கள் முன்னிலையில் பகிரங்கப்படுத்துவதை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதற்காக அடுத்த கூட்டத்திற்கு அனைத்து ஊடக நிறுவனங்களையும் அழைத்து இது பற்றி மேலும் விவாதிக்க வேண்டும் என்று கௌசிஸ் உறுப்பினர் ஒப்புக்கொண்டுள்ளார்.