சூடானில் மருத்துவமனைகளை குறிவைத்து தாக்குதல்!
சூடானில் மோதலில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரும் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ பணியாளர்களிற்கு எதிராக யுத்த குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர் என்பதற்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது.
செய்மதி படங்கள் உட்பட பல விடயங்களை பயன்படுத்தி பிபிசியின் குழுவினர் மருத்துவமனைகள் இலக்குவைக்கப்படுகின்றன என்ற முடிவிற்கு வந்துள்ளனர்.
மருத்துவமனைகளில் நோயாளர்கள் காணப்படும் வேளையில் மருத்துவமனைகள் ஆட்டிலறி ரொக்கட் தாக்குதல்களுக்குள்ளாகின்றன எனவும், வைத்தியர்கள் வேண்டுமென்றே இலக்குவைக்கப்படுகின்றனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சூடான் தலைநகர் கார்ட்டோமில் உள்ள 88 மருத்துவமனைகளில் ஒரு சில மருத்துவமனைகள் மாத்திரமே இயங்குகின்றன என சூடானின் மருத்துவர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
மருத்துவமனைகள் மீதான தாக்குதல்களை சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மோசமாக மீறும் செயல் என தெரிவித்துள்ள உலகசுகாதார ஸ்தாபனம் இவற்றை நிறுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.