அடுத்த மாதம் ட்ரம்பின் மலேசிய பயணத்தை உறுதி செய்த பிரதமர் அன்வார் ;மறுஆய்வு செய்யும் புதின்

அடுத்த மாதம் நடைபெறும் 47வது ஆசியான் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் மலேசியா செல்வார் என்பதை அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் உறுதிப்படுத்தியுள்ளார்.
செவ்வாய்க்கிழமை கோலாலம்பூரில் நடைபெற்ற அம்பேங்க் குழுமத்தின் 50ஆவது பொன்விழா இரவு விருந்தில் பேசிய திரு அன்வார், சீனப் பிரதமர் லி கியாங்கும் கலந்துகொள்ளும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள டிரம்ப் விருப்பம் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.
“அதிபர் டிரம்ப் அடுத்த மாதம் 47ஆவது ஆசியான் மாநாட்டுடன் இணைந்து மலேசியாவுக்கு வரவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்,” என்றார் அன்வார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினும் மலேசியாவுக்கு வருவதை உன்னிப்பாக மறுஆய்வு செய்துவருவதாக அவ்விருத் தலைவர்களுக்கும் இடையே அண்மையில் பெய்ஜிங்கில் நடந்த சந்திப்பிற்குப் பிறகு தெரிவித்தார்.
“அதிபர் புட்டின் பெய்ஜிங்கில் என்னைச் சந்தித்து, மலேசியாவுக்கு வருவது குறித்து தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகக் கூறினார்,” என்று அன்வார் மேலும் கூறினார்.
உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியிலும் மலேசியாவின் புவிசார் அரசியல் முக்கியத்துவம் அதிகரித்து வருவதை உலகத் தலைவர்களின் வருகை எடுத்துக்காட்டுவதாகவும் அன்வார் கூறினார்.
“சோதனைகள் மிகுந்த காலகட்டத்தில் நாம் தற்போது இருக்கிறோம். ஆனாலும், நம் நாட்டின் மீள்திறனைக் கண்டு நான் நம்பிக்கையாக இருக்கிறேன்,” என்று அவர் கூறினார்.
உள்நாட்டு நிலைத்தன்மை குறித்தும் பேசிய அவர், முதலீட்டாளர்களின் நம்பிக்கைக்கு ஆதாரம் அளிக்கும் அரசியல் நிலைத்தன்மை, பொருளியல் தெளிவு ஆகியவற்றை உறுதிப்படுத்த தம் நிர்வாகம் உறுதிபூண்டுள்ளதாகவும் அன்வார் மீண்டும் வலியுறுத்தினார்.