நீருக்கடியில் தாக்குதல் நடத்தும் ஆளில்லா விமானங்களுக்கு $1.4 பில்லியன் செலவிட உள்ள ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா மிகப் பெரிய தானியக்கக் நீருக்கடியில் தாக்குதல் நடத்தும் ட்ரோன்கள் உருவாக்க $1.4 பில்லியனை முதலிடவிருக்கிறது. ‘கோஸ்ட் ஷார்க்’ எனும் பெயர்கொண்ட அது, நாட்டின் கடற்படை ஆற்றல்களை வலுப்படுத்தும் என்று ஆஸ்திரேலியா நம்புகிறது.
துணைப் பிரதமர் ரிச்சர்ட் மார்ல்ஸ் புதன்கிழமை (செப்டம்பர் 10) சிட்னியில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அதனைத் தெரிவித்தார்.
ஏண்டுரில் ஆஸ்திரேலியா நிறுவனத்துடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் நீருக்கடியில் தாக்குதல் நடத்தும் ட்ரோன்கள் உருவாக்கப்படும்.
“உலகின் ஆக உயரிய தொழில்நுட்ப ஆற்றல்கொண்ட வாகனம் இது. தானியக்கக் கடலடி ராணுவ ஆற்றல்களில் உலக அளவில் ஆஸ்திரேலியா முன்னணி வகிப்பதையே இது காட்டுகிறது,” என்றார் மார்ல்ஸ்.
கோஸ்ட் ஷார்க் கடலடி வாகனத்தால் வேவு, கண்காணிப்பு, தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் என்று அவர் சொன்னார்.
அடுத்த ஆண்டுத் (2026) தொடக்கத்தில் முதல் வாகனம் சேவையைத் தொடங்கும் என்று கூறிய மார்ல்ஸ், அடுத்த ஐந்து ஆண்டுகளில் அத்தகைய மேலும் பல கடலடி வாகனங்களைச் சேவையில் ஈடுபடுத்த அரசாங்கம் எண்ணியிருப்பதாகத் தெரிவித்தார்.
வட்டாரத்தில் சீனா அதன் ராணுவ பலத்தை அதிவிரைவில் விரிவுபடுத்திவருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியா அதன் தற்காப்பு ஆற்றல்களை வலுப்படுத்துகிறது.