இஸ்ரேலுடனான வர்த்தகத்தை முற்றிலும் துண்டித்த துருக்கி

காசா நகர் மீது 21 மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில், 63 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர். 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
காசாவுக்கு ஆதரவாக உள்ள லெபனான், சிரியா உள்ளிட்ட நாடுகள் மீதும் இஸ்ரேல் அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதில், லெபனானுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ளது. ஈரானுடன் இஸ்ரேல் மோதி வருகிறது. மத்திய கிழக்கு பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் நடத்த கூடிய சூழல் காணப்படுகிறது.
இந்நிலையில், காசா தாக்குதலை முன்னிட்டு, இஸ்ரேலுடனான வான் மற்றும் கடல் வழி வர்த்தக உறவுகளை துருக்கி அரசு நிறுத்தியுள்ளது. இஸ்ரேல் நாட்டு துறைமுகங்களுக்கு துருக்கி கப்பல்கள் செல்வது முற்றிலும் நிறுத்தப்பட்டு உள்ளது. துருக்கி வான்வெளியை இஸ்ரேலிய விமானங்கள் பயன்படுத்தவும் தடை விதித்து உள்ளது.
இதுபற்றி துருக்கியின் வெளியுறவு துறை மந்திரி ஹகன் பிடன் விடுத்துள்ள எச்சரிக்கையில், இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். அப்படி அவர்கள் போரை நிறுத்தவில்லை என்றால், மத்திய கிழக்கு பகுதி முழுவதும் போரால் பாதிக்கப்படும் என்றார்.
இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கையை எடுக்கும்படி சர்வதேச நாடுகளுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். அதனுடன், இஸ்ரேலுக்கு அளித்து வரும் ஆதரவை நிறுத்தும்படியும் உலக நாடுகளிடம் அவர் வலியுறுத்தி உள்ளார். இஸ்ரேலுக்கு எதிராக தடை உள்ளிட்ட அர்த்தமுள்ள நடவடிக்கையை எந்தவொரு நாடும் இதுவரை எடுக்கவில்லை என்று கூறினார.
சமீபத்தில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவையும், அடால்ப் ஹிட்லரையும் ஒப்பிட்டு பேசிய துருக்கி ஜனாதிபதி தயீப் எர்டோகன், காசாவுக்கு எதிரான அந்நாட்டின் நடவடிக்கைகளை இனப்படுகொலை என தொடர்ந்து கூறி வருகிறார்.