இலங்கை திருகோணமலையில் அதிகாலை நடந்த விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு

திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாமல்வத்தை பகுதியில் மோட்டார் சைக்கிள் துவிச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் துவிசசர்க்கர வண்டியில் பயணித்த நபரொருவர் இன்று (29) அதிகாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் கந்தளாய் -முள்ளிப்பொத்தானை -யுனிட் 09 வசித்து வரும் கே.ராஜேந்திரன் (71வயது) எனவும் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து தெரிய வருவது -நாமல்வத்தை பகுதிக்கு யானை மின் வேலி பாதுகாப்பிற்காக கடமைக்காக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர் துவிச்சக்கர வண்டியுடன் மோதியதினால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்துடன் தொடர்புடைய சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தரான கோமரங்கடவல-கல்யாணபுர பகுதியைச் சேர்ந்த 36 வயது உடைய நபரை கைது செய்துள்ளதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
துவிச்சக்கர வண்டியில் பயணித்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பிலான விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.