தாய்லாந்து பிரதமர் பீடோங்டர்ன் ஷினவத்ராவின் பதவி நீக்கம் குறித்து தீர்ப்பளித்த நீதிமன்றம்

தாய்லாந்து அரசமைப்பு நீதிமன்றம் இடைக்காலமாக பதவி நீக்கம் செய்யப்பட்ட அந்நாட்டுப் பிரதமர் பெய்டோங்டார்னை நிரந்தரமாக பதவியில் இருந்து நீக்கியுள்ளது.
கம்போடியாவுடனான எல்லைப் பிரச்சினையில் அவர் நெறிமுறை தவறி நடந்துகொண்டதாக நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியது. நீதிமன்றத்தின் இந்த முடிவு பிரதமரின் கூட்டணி அரசுக்கும் அந்நாட்டின் முக்கிய அரசியல் குடும்பத்திற்கும் ஒரு பேரடி என்று வர்ணிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தாய்லாந்துப் பிரதமர் பெய்டோங்டார்ன் ஷினவாத் கம்போடியாவுடனான நாட்டின் எல்லைப் பிரச்சினையை கையாண்ட விதத்துக்காக அவர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.அவரை முழுமையாகப் பதவியிலிருந்து நீக்குவது குறித்து அந்நாட்டு அரசமைப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) முடிவு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
தாய்லாந்தின் முன்னாள் பிரதமரும் பெரும் செல்வந்தருமான தக்சின் ஷினவாத்தின் புதல்வி பெய்டோங்டார்ன். அவர் ஜூன் மாதம் கம்போடியாவுடனான எல்லைப் பிரச்சினையைத் தீர்க்கும் முயற்சியில் அந்நாட்டின் முன்னாள் பிரதமரான ஹுன் சென்னுடன் தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டார். அந்த உரையாடல் பதிவு செய்யப்பட்டு வெளியான நிலையில் அதில் அவர் நாட்டை விட்டுக்கொடுத்துப் பேசியதாக அவர் மீது புகார் எழுந்தது.
தாய்லாந்தில் ஏற்கெனவே ஓராண்டுக்கு முன்னர் அரசமைப்பு நீதிமன்றத்தால் அந்நாட்டுப் பிரதமர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், பெய்டோங்டார்னையும் பதவியிலிருந்து நீக்கினால் நாட்டின் தற்போதைய நிலையில் பிரதமர் வேட்பாளராக எவரையும் குறிப்பிட முடியாத சூழல் இருப்பதாகக் கூறப்படுகிறது. இது நாட்டில் அரசியல் நெருக்கடி நிலையை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்படுகிறது.
கம்போடியாவில் நீண்டகாலம் பிரதமராக இருந்த ஹுன் சென்னுடன் நிகழ்த்திய தொலைபேசி உரையாடலில் அவரை ‘அங்கிள்’ என அழைத்ததுடன் தாய்லாந்து நாட்டின் ராணுவத் தலைமைத் தளபதியை தனது எதிரி என்றும் பெய்டோங்டார்ன் குறிப்பிட்டதாகக் கூறப்படுகிறது. தாய்லாந்தில் ராணுவத்துக்கு பெருமதிப்பு உள்ள நிலையில், அவரின் இந்த சர்ச்சைப் பேச்சு பெரும் புயலைக் கிளப்பியது.
இதைத் தொடர்ந்து நாட்டின் பழமைவாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரை கம்போடியாவுக்கு அடிபணிந்து விட்டதாகக் குறைகூறியுள்ளனர். இந்நிலையில், இந்தப் பிரச்சினை தொடர்பாக சில செனட்டர்கள் தாய்லாந்தின் அரசமைப்பு நீதிமன்றத்தை அணுகியுள்ளது குறிப்பிடத்தக்கது.