போருக்குப் பிந்தைய காசா குறித்த ‘பெரிய கூட்டத்திற்கு’ தலைமை தாங்கும் டிரம்ப் ; விட்காஃப்

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் காஸாவுக்கானப் போருக்குப் பிந்திய திட்டம் குறித்த கலந்துரையாடலை புதன்கிழமை (ஆகஸ்ட் 26) நடத்தவிருப்பதாக அமெரிக்கச் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்கோஃப் தெரிவித்துள்ளார்.
“வெள்ளை மாளிகையில் அதிபரின் தலைமையில் பெரிய கூட்டம் ஒன்று நடைபெறவிருக்கிறது. நாங்கள் விரிவான திட்டத்தை வகுக்கிறோம்,” என்று விட்கோஃப் கூறினார்.
2023 அக்டோபரில் காஸாவில் தொடங்கிய இஸ்ரேலின் போர் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான திட்டங்கள் ஏதேனும் இருக்கிறதா என்றும் விட்கோஃபிடம் கேட்கப்பட்டது.
இவ்வாண்டின் முற்பாதியில் காஸாவை அமெரிக்கா கைப்பற்றி அங்குள்ள இரண்டு மில்லியன் குடிமக்களை வெளியேற்றிவிட்டு கரையோரக் குடியிருப்புகளைக் கட்டவேண்டும் என்று டிரம்ப் கூறியது உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
காஸாவில் உள்ள இடிபாடுகளையும் வெடிக்காத வெடிகுண்டுகளையும் அமெரிக்கா நீக்கி அதை மத்திய கிழக்கின் சோலைவனமாக மாற்றும் என்று டிரம்ப் குறிப்பிட்டார்.
ஐரோப்பிய நாடுகளும் அரபுச் சிற்றரசு நாடுகளும் கடுமையாகச் சாடிய டிரம்ப்பின் யோசனையைப் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு பாராட்டினார்.
வெள்ளை மாளிகையில் வகுக்கப்படும் திட்டம் குறித்து விட்கோஃப் விரிவான தகவல்களை வெளியிடாவிட்டாலும் அது எந்த அளவு வலுவாக உள்ளது என்பதை மக்கள் காண்பார்கள் என்று நம்புவதாகக் குறிப்பிட்டார்.
2023ஆம் ஆண்டு ஹமாஸ் கிளர்ச்சிக் குழு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து காஸாவில் போர் மூண்டது. ஹமாஸ் தாக்குதலில் 1,219 பேர் உயிரிழந்தனர்.