இலங்கையின் நான்காவது பெரிய மனித புதைகுழி கொழும்பில்!

கொழும்பில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி, இதுவரை அடையாளம் காணப்பட்ட உடல்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், நாட்டின் நான்காவது பெரிய மனிதப் புதைகுழியாக மாறியுள்ளது.
தற்போதைய அரசாங்கம் போதுமான நிதியை வழங்கத் தவறியதால் ஆரம்பத்தில் அகழ்வுப் பணிகள் தாமதமான கொழும்பு துறைமுக மனித புதைகுழியிலிருந்து குறைந்தது 88 பேரின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.
மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு முடிவடையும் தருவாயில் இருப்பதைக் காண முடிந்ததாக கடந்த வாரம் புதைகுழியைப் பார்வையிட்ட ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மூத்த தொல்பொருள் பேராசிரியர் ராஜ் சோமதேவவின் தலைமையில் நீதவான் கசுன் திசாநாயக்கவின் மேற்பார்வையில் அகழ்வு இடம்பெற்று வரும் கொழும்பு துறைமுகப் புதைகுழியில் பலரின் எலும்புக்கூடுகள் இருப்பதையும், பலரது மனித எலும்புக்கூடுகள் எவ்வாறு மீட்கப்பட்டுள்ளன என்பதையும் ஊடகவியலாளர்கள் அவதானித்திருந்தனர்.
கொழும்பு துறைமுக மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளன.
கொழும்பு துறைமுகத்திற்குச் செல்லும் புதிய அதிவேக வீதியை நிர்மாணிப்பதற்காக பூமியைத் அகழ்ந்தபோது ஜூலை 13, 2024 அன்று அந்த பிரதேசத்தில் அமைந்துள்ள பழைய செயலக வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டன.
இது தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிவித்த பின்னர், கொழும்பு புதுக்கடை மேலதிக நீதவான் பண்டார இலங்கசிங்கவின் உத்தரவின் பேரில், செப்டெம்பர் 5, 2024 அன்று அந்த இடத்தில் அகழ்வாய்வு பணிகள் ஆரம்பமாகின.
அண்மையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணாயக்கார, இலங்கையில் 17 மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக முதன்முறையாக வெளிப்படுத்தியிருந்தார். அவை குறித்த பெயர் விபரங்களையும் அவர் வெளிப்படுத்தியிருந்தார்.
இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய புதைகுழி மன்னாரில் உள்ள சதொச புதைகுழி ஆகும், அங்கு 28 சிறுவர்களின் எலும்புகள் உட்பட 376 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.
இலங்கையில் இரண்டாவது பெரிய மனித புதைகுழியாக தற்போது அகழ்வாய்வுப் பணிகள் இடம்பெற்று வரும் செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனித புதைகுழி பதிவாகியுள்ளது. அந்த புதைகுழி வளாகத்தில் இருந்து குழந்தைகள் உட்பட 166 பேரின் எலும்புக்கூடுகள் (ஓகஸ்ட் 26 வரை) அடையாளம் காணப்பட்டுள்ளன.
2013 ஆம் ஆண்டில், இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மூன்றாவது பெரிய புதைகுழியாகக் கருதப்படும் மாத்தளை வைத்தியசாலைக்கு அருகிலுள்ள ஒரு இடத்திலிருந்து 155 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன.
ஐந்தாவது பெரிய புதைகுழி மன்னாரில் உள்ள திருக்கேதீஸ்வரம் புதைகுழியாகும். அங்கு 2013 இல் 82 மனித உடல்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வாய்வு பணிகள் நிறைவடைந்த நேரத்தில், 52 நபர்களின் எச்சங்கள் மீட்கப்பட்டன.