ரணிலின் நலம் விசாரிக்க வருபவர்களை மட்டுப்படுத்த நடவடிக்கை

தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்திக்க வருபவர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துமாறு கொழும்பு தேசிய மருத்துவமனையின் துணை இயக்குநர் ருக்ஷான் பெல்லன கேட்டுக்கொண்டுள்ளார்.
அதற்கமைய, முன்னாள் ஜனாதிபதியின் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பார்வையிட அனுமதித்தால் அது பொருத்தமானதாக இருக்கும் என மருத்துவர் கூறினார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு இந்தக் கோரிக்கை விடுக்கப்படுவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிக்கு தற்போது ஓய்வு தேவை. அவரைப் பார்க்க தொடர்ந்து வருகை தருவது அதற்குத் தடையாக இருப்பதாக ருக்ஷான் பெல்லன குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் மேலும் 9 நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அது அவர்களுக்கும் ஒரு தடையாக இருப்பதாகவும் மருத்துவர் மேலும் தெரிவித்துள்ளார்.