செவ்வாயை நோக்கிய பயணத்துக்கு தயாராகும் நாசா – உருவான புதிய ஆய்வுக்கூடம்

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில், செவ்வாய் நிலப்பரப்பைப் போன்ற சூழலுடன் ஒரு ஆய்வுக்கூடத்தை நாசா நிறுவியுள்ளது.
செவ்வாய் கிரக பயணத்துக்கான தயாரிப்பின் ஒரு முக்கிய கட்டமாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
1700 சதுர அடி பரப்பளவில் 3D தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்ட இந்த மாடல் ஆய்வுக்கூடத்தில், 4 பேர் கொண்ட விண்வெளி பயணிகள் குழுவினர் அக்டோபர் மாதத்திலிருந்து ஒரு வருடம் முழுவதும் தங்கவுள்ளனர்.
2030-ஆம் ஆண்டுக்குள் செவ்வாய் கிரகத்திற்கு மனிதனை அனுப்பும் நோக்கத்தில் நாசா திட்டமிட்டுள்ளது. இந்த புதிய முயற்சி, அதற்கான முதற்கட்ட சோதனை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும்.
பூமியிலேயே செவ்வாயைப் போன்ற சூழலை உருவாக்கி, அங்கு தங்கும் வீரர்களின் உடல் மற்றும் மனவலிமையைப் பரிசோதிக்க, நாசா இந்த திட்டத்தை துவக்கியுள்ளது. அவர்கள் முற்றிலும் வெளி உலகத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட சூழலில் வாழ்வார்கள் என நாசா அறிவித்துள்ளது.
உடற்பயிற்சி, உணவு, நீர், தினசரி பணிகள் மற்றும் தீர்வுகள் தேவைப்படும் சவால்களை சமாளிக்கும் திறன் ஆகியவற்றை மதிப்பீடு செய்ய இந்த ஆய்வுகள் நடைபெறும். இது எதிர்கால செவ்வாய் பயணங்களுக்கு முக்கிய வழிகாட்டியாக அமையும் என நாசா விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.