ஒரு நாள் போட்டிகளில் இருந்து ரோஹித் நீக்கமா? பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பு

2027 உலகக் கோப்பைக்கு முன்னதாக ரோஹித் ஷர்மா ஒரு நாள் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்படவுள்ளதாக குறித்து வெளியான அறிக்கைகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மறுத்துள்ளது.
பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியாவின் கூற்றுப்படி, ஷ்ரேயாஸ் ஐயர் ஒருநாள் போட்டிகளுக்கு (ஓடிஐ) கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எந்தவித விவாதமும் வாரியத்தில் நடைபெறவில்லை.30 வயதான ஷ்ரேயாஸ் ஐயர், கடந்த சில ஆண்டுகளில் தனது மதிப்பை உயர்த்தியுள்ளார், குறிப்பாக ஒருநாள் அணியில் தனது இடத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
2025 சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய அவர், 5 இன்னிங்ஸ்களில் 243 ரன்கள் குவித்து, 48.60 சராசரியுடன் அணியின் முன்னணி ரன் குவிப்பவராக திகழ்ந்தார். மேலும், ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளை ஒரு முறை வீதம் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்று, கேப்டனாகவும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இருப்பினும், 38 வயதாகியிருக்கும் ரோஹித் ஷர்மா 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாடுவாரா என்பது உறுதியாகவில்லை.
இந்த விவகாரம் குறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸுக்கு பிரத்யேகமாக பேசிய சைகியா, “அது எனக்கு புதிய தகவல். அது குறித்து எந்த விவாதமும் நடைபெறவில்லை,” என்று திட்டவட்டமாக கூறினார். 2025 ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய போதிலும், ஆசிய கோப்பை 2025 அணியில் இருந்து ஷ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மும்பையைச் சேர்ந்த இந்த கிரிக்கெட் வீரர், பஞ்சாப் கிங்ஸ் அணியால் 26.75 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டு, 17 போட்டிகளில் 604 ரன்கள் குவித்து, 11 ஆண்டுகளில் முதல் முறையாக அந்த அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார். சுப்மன் கில் குறித்து பேசுகையில், அவர் ஒருநாள் போட்டிகளில் 59 சராசரி வைத்துள்ளார் மற்றும் தற்போது அணியின் துணை கேப்டனாக உள்ளார். “சமீபத்தில் டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டு, வெற்றிகளைப் பெற்று, வயது பக்கபலமாக உள்ள ஒருவர், பொருத்தமான நேரத்தில் ஒருநாள் கிரிக்கெட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்காமல் இருக்க வாய்ப்பில்லை,” என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.