மாஸ்கோவில் ரஷ்ய ஜனாதிபதியை சந்தித்த இந்திய வெளியுறவு அமைச்சர்

இந்திய வெளியுறவு துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் 3 நாள் பயணமாக ரஷியாவுக்கு சென்றார். தலைநகர் மாஸ்கோவில் நடந்த இந்தியா – ரஷியா வணிக மன்ற கூட்டத்தில் ஜெய்சங்கர் கலந்து கொண்டு பேசினார். பின்னர் ரஷிய அதிபர் புதினை ஜெய்சங்கர்ச் சந்தித்து பேசினார்.
இந்தியா – ரஷியா இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜே லாவ்ரோவுடன் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து, புதினை சந்தித்து இருக்கிறார். ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என்று வலியுறுத்தி வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவுக்கு எதிராக 50 சதவீத வரி விதித்துள்ளார். இத்தகைய சூழலில் புதின் – ஜெய்சங்கர் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் மற்றும் மேக் இன் இந்தியா போன்ற முயற்சிகள் வெளிநாட்டு வணிகங்களுக்கு புதிய வாய்ப்புகளை திறந்து உள்ளன. இது ரஷிய நிறுவனங்கள் அதிகமாக இந்தியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கி உள்ளன.
எனவே ரஷிய நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களுடன் இன்னும் தீவிரமான வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும். இந்தியாவும் ரஷியாவும் தற்போதைய காலத்தில் நிலையான உறவுகளில் ஒன்றை வளர்த்துள்ளன.
ஆனாலும் அது குறிப்பிடத்தக்க பொருளாதார ஒத்துழைப்பாக மாறவில்லை. நமது வர்த்தகம் குறை-வாகவே உள்ளது. வர்த்தக பற்றாக்குறை உள்ளதால் அதை நிவர்த்தி செய்ய வேண்டும். வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும் விரைவுபடுத்துவதிலும் இரு நாடுகளுக்கும் ஒருவருக்கொருவர் செய்யக்கூடியது நிறைய இருக்கிறது.
வர்த்தக ஏற்றத்தாழ்வை அவசரமாக நிவர்த்தி செய்ய வேண்டும். இது நமது வர்த்தகத்தை வளர்ப்பதற்கு மட்டுமல்லாமல், 2030ம் ஆண்டுக்குள் நமது திருத்தப்பட்ட வர்த்தக இலக்கான 100 பில்லியன் டாலர்களை சரியான நேரத்தில் அடைவதை விரைவுபடுத்தவும் உதவும். இவ்வாறு அவர் கூறினார்.