உலகின் முதல் 360° கேமரா ட்ரோன் கண்டுபிடிப்பு

ட்ரோன் தொழில்நுட்பத்தில் தொடர்ந்து புதிய கண்டுபிடிப்புகள் வந்துகொண்டிருந்தாலும், சில முயற்சிகள் மட்டுமே புதிய அனுபவத்தைத் தருகின்றன. அந்த வகையில், ஆன்டிகிராவிட்டி A1 டிரோன், தற்போது சந்தையில் புதிய போக்கைத் தொடங்கியுள்ளது. இது ஒரு வழக்கமான டிரோனைப் போல இல்லாமல், முற்றிலும் புதிய கோணத்தில் வீடியோ மற்றும் புகைப்படங்களை உருவாக்கும் திறனைக் கொண்டுள்ளது.
ஆன்டிகிராவிட்டி A1-ஐ மற்ற டிரோன்களிடமிருந்து வேறுபடுத்துவது அதன் தனித்துவமான வடிவமைப்பு, செயல்படும் விதம். இது உலகின் முதல் ஆல்-இன்-ஒன் (All-in-one) 360 வீடியோ ட்ரோன் என்றழைக்கப்படுகிறது. இதன் சிறப்பு அம்சம், 360 டிகிரி வீடியோவை ஒரே ஷாட்டில் பதிவு செய்யும் திறன். இது பார்ப்பவர்களுக்கு ஒரு விரிவான மற்றும் முழுமையான காட்சியை வழங்குகிறது.
வழக்கமான ட்ரோன்கள் போல அல்லாமல், A1 ஒரு வி.ஆர் (VR) ரக கண்ணாடியைப் பயன்படுத்தி இயக்கப்படுகிறது. மேலும், இதை கையால் பிடித்துக்கொள்ளக்கூடிய மோஷன்-சென்சிட்டிவ் கிரிப் (motion-sensitive Grip) மூலம் கட்டுப்படுத்தலாம். இந்த அமைப்பு, பைலட்டுக்கு உள்ளுணர்வு அனுபவத்தை (FPV-ish flight) வழங்குகிறது. இது வீடியோ கேம் விளையாடுவது போன்ற உணர்வை ஏற்படுத்துவதோடு, டிரோனை எளிதாகக் கட்டுப்படுத்த உதவுகிறது.
360 டிகிரி வீடியோ பதிவு செய்யும் திறன், படைப்பாளர்களுக்கு வரம்பற்ற சுதந்திரத்தை வழங்குகிறது. பாரம்பரியமான டிரோன்களில், நீங்கள் கேமராவை குறிப்பிட்ட திசையில் மட்டுமே வைக்க முடியும். ஆனால், A1-ல் முழுப் பரந்த காட்சியையும் பதிவு செய்து, பின்னர் உங்களுக்குத் தேவையான கோணத்தில் காட்சிகளை தேர்ந்தெடுக்க முடியும். இதற்கு, post-production reframing நுட்பம் உதவுகிறது. இந்த அம்சம், சாகச வீடியோ அல்லது பயணக் காட்சியைப் பதிவு செய்யும் போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஆன்டிகிராவிட்டி A1 ட்ரோன் பல புதுமையான அம்சங்களைக் கொண்டிருந்தாலும், சில சவால்களையும் எதிர்கொள்ளக்கூடும். உதாரணமாக, பல நாடுகளில், கண்ணாடியைப் பயன்படுத்தி ட்ரோனை இயக்க, பைலட்டுடன் துணை நபர் (spotter) உடனிருக்க வேண்டும் என்பது ஒரு விதி. இது தனியாகப் பறக்க விரும்புபவர்களுக்கு சிக்கலாக இருக்கலாம்.
இவை அனைத்தையும் கடந்து, இந்த ட்ரோன் தொழில்நுட்பத்தை புதிய நிலைக்கு எடுத்துச்செல்கிறது. வீடியோ மற்றும் புகைப்படத் துறையில் புரட்சியை ஏற்படுத்தக்கூடிய பல வாய்ப்புகளை இது வழங்குகிறது. 2026-ன் தொடக்கத்தில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படும் இந்த ட்ரோன், சந்தையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.