இலங்கை செம்மணி மனித புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட பிற பொருட்களை அடையாளம் காண பொதுமக்களிடம் கோரிக்கை!

விசாரணைக்கு உதவும் வகையில், செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனித புதைகுழியில் இருந்து இதுவரை மீட்கப்பட்ட பிற பொருட்கள் மற்றும் உடைகளை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்த நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இலங்கையில் மனித எலும்புக்கூடு அகழ்வாய்வு வரலாற்றில், குற்றம் இடம்பெற்ற பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்ட வளாகத்தில் பொதுமக்களின் பங்களிப்புடன் இதுபோன்ற அடையாளம் காணும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது இதுவே முதல் முறை எனக் கருதப்படுகிறது.
சித்துப்பாத்தி மனித புதைகுழி வளாகத்தில் ஓகஸ்ட் 5, 2025 அன்று பிற்பகல் 1.30 முதல் மாலை 5 மணி வரை இந்த பொருட்கள் காட்சிப்படுத்தப்படும் என்பதோடு, அதிலுள்ள பொருட்களை அடையாளம் காணும் பொதுமக்கள் இதுத் தொடர்பில் நீதிமன்றத்திற்கோ அல்லது குற்றப் புலனாய்வு பிரிவினருக்கோ அறிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“மனித எலும்புக்கூடுகளுடன் கண்டுக்கப்பட்ட உடைகள் மற்றும் பிறபொருட்கள் என்பனவற்றை பொது மக்களுக்கு காண்பித்து அதன் மூலம் விசாரணை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு பெற்றுக்கொள்வதற்காக நீதிமன்றமானது அனுமதியை வழங்கியுள்ளது.”
மனித புதைகுழியில் இருந்து இதுவரை மீட்கப்பட்ட பிற பொருட்களில், குழந்தை பால் போத்தல், சிறுவர்கள் விளையாடும் பொம்மை, சிறுவர் காலணிகள், பாடசாலை பை உள்ளிட்டவை அடங்கும். இவ்வாறு மீட்கப்பட்ட பொருட்களின் எண்ணிக்கை 50ற்கும் அதிகம் என பிரதேச ஊடகவியலாளர்கள் கூறுகின்றனர்.
இரண்டாம் கட்ட அகழ்வாய்வின் 27ஆவது நாளான இன்று வரை (ஓகஸ்ட் 1), சிறுவர்கள் உட்பட 112 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இதுவரை அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 122ஆக உயர்வடைந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சிடமிருந்து புதிய அனுமதி தேவையில்லை எனவும், பாதுகாப்பு அமைச்சிடமிருந்து புதிதாக அனுமதி பெற தேவைப்படாத ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஸ்கேன் இயந்திரத்தின் ஊடாக ஓகஸ்ட் 4 ஆம் திகதி ஆய்வுகளை நடத்த எதிர்பார்ப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜா, ஜூலை 29 அன்று ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
எலும்புக்கூடுகள் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்ட செம்மணி சித்துப்பாத்தி மயான பூமியில் அகழ்வாராய்ச்சிகள், தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவா மற்றும் யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், மே 15, 2025 ஆரம்பமானது.