இலங்கை

இலங்கை: “இது நாடா அல்லது சுடுகாடா?” மன்னாரில் ஆர்ப்பாட்டம்

இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மனித புதைகுழி அமைந்துள்ள மன்னாரில், இலங்கையில் காணப்படும் அனைத்து மனித புதைகுழிகளையும் சர்வதேச தரத்திற்கு அமைய அகழ்வாய்வு செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

“’எங்கே எங்கள் உறவுகள் எங்கே?,” “இலங்கை அரசே இது நாடா அல்லது இடுகாடா?”, “வேண்டும் வேண்டும் சர்வதேச விசாரணை வேண்டும்,” “மனிதனும் புதைகுழிக்குள் நீதியும் புதைகுழிக்குள்ளா”, போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு மன்னார், அடம்பன் சந்தியிலிருந்து திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி வரை பேரணியாக சென்ற மன்னார் மக்கள், மனித புதைகுழிகள் குறித்த அகழ்வாய்வுகளை வெளிப்படையான முறையில் மேற்கொள்ளுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினர்.

இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய புதைகுழி மன்னாரில் உள்ள சதொச புதைகுழி ஆகும், அங்கு 28 சிறுவர்களின் எலும்புகள் உட்பட 376 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன. இலங்கையில் நான்காவது பெரிய மனித புதைகுழியாக மன்னாரில் உள்ள திருக்கேதீஸ்வரம் புதைகுழி தற்போது மாறியுள்ளது. அங்கு 82 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.

கறுப்பு ஜூலையின் இரண்டாவது நாளான நேற்று முன்தினம் (ஜூலை 24) இடம்பெற்ற கவனயீர்ப்புப் போராட்டமும், பேரணியும் திருக்கேதீஸ்வரம் புதைகுழியில் புதைக்கப்பட்ட தமிழர்களுக்கு மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தி நிறைவு செய்யப்பட்டதாக பிரதேச ஊடகவியலாளர்கள் கூறுகின்றனர்.

இனப்படுகொலைக்கு சாட்சியாக இருக்கும் திருக்கேதீஸ்வரம் புதைகுழிக்கான நீதி தாமதமாகியுள்ளதாக போராட்டத்திற்கு தலைமைத் தாங்கிய மாந்தை மேற்கு வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவர்களில் ஒருவர் குறிப்பிட்டார்.

“மனித புதைகுழிகள் முறையான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படாமல் வெறும் கண்துடைப்புக்கு விசாரணைகளை நடத்தி காலம் கடத்துவதற்கு இலங்கை அரசு முயற்சிக்கின்றது. நாம் நிற்கின்ற திருக்கேதீஸ்வரம் புதைகுழிகூட இன அழிப்பு, இனப்படுகொலையின் சாட்சியாக இருக்கின்றபோதிலும் அது அகழ்வின் பின்னர் நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு முழுவதும் இந்த நிலைமை தொடர்கிறது. அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட செம்மணியில் அகழ்வு இடம்பெறுகின்றபோதிலும் அது சர்வதேச தரத்திற்கு அமைய இடம்பெறவில்லை. எனவே இந்த நாட்டில் கண்டறியப்பட்ட மனித புதைகுழிகள் முறையான ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். அதில் ஒரு வெளிப்படைத்தன்மை பேணப்பட வேண்டும்.”

மாந்தை மேற்கு வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியம், ஜனாதிபதி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றுக்கு அனுப்பி வைப்பதற்காக, தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை சந்தியோகு மார்கஸிடம் கையளித்ததாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வடக்கு மற்றும் கிழக்கில் காணப்படும் அனைத்து புதைகுழிகளிலும் புதைக்கப்பட்டுள்ள தங்கள் அன்புக்குரியவர்களுக்கு நீதியை உறுதி செய்ய சர்வதேச சமூகத்துடன் இணைந்து பணியாற்றுமாறு மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை சந்தியோகு மார்கஸ் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

“இந்த இடத்திலே (திருக்கேதீஸ்வரம்) புதைக்கப்பட்டவர்கள் யார் என்பது இனங்காணப்பட வேண்டுமென்றும், வடக்கு கிழக்கிலே இருக்கின்ற புதைகுழிகளை இனங்கண்டு, அந்த புதைகுழிகளுக்குள் இருக்கும் எங்கள் உறவுகளை புதைத்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி உறவுகளை இழந்து தவிக்கின்றவர்களுக்கு நீதியை வழங்க சர்வதேச சமூகத்துடன் இலங்கை அரசு இணைந்து செயற்பட வேண்டுமென எங்களுடைய உறவுகள் புதைக்கப்பட்ட இந்த மண்ணில் நின்று கோருகின்றேன்.”

(Visited 3 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
Skip to content