மும்பை ரயில் குண்டுவெடிப்பு: 12 பேர் விடுவிக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை

மும்பை ரயில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 189 பேர் உயிரிழந்த வழக்கில் 12 பேர் விடுவிக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. கடந்த 2006ஆம் ஆண்டில் மும்பை புறநகர் ரயில்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் 189 பேர் மாண்டனர்.
இது தொடர்பான வழக்கை விசாரித்த மும்பை சிறப்பு நீதிமன்றம் 12 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளித்தது. இவர்களில் 5 பேருக்கு மரண தண்டனையும் 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.
ஆனால், குற்றவாளிகள் சார்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் 12 பேரையும் விடுதலை செய்யுமாறு திங்கட்கிழமை உத்தரவிட்டது. இதில் அனைவரும் விடுதலையாகினர்.
இந்நிலையில், மும்பை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மகாராஷ்டிர அரசாங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுவை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என். கோடீஸ்வர் சிங் அடங்கிய அமர்வு வியாழக்கிழமை (ஜூலை 24) விசாரித்தது.அப்போது, குற்றவாளிகளை விடுவித்து மும்பை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
மேலும் இந்த மனு தொடர்பாக பதில் அளிக்குமாறு அனைத்து குற்றவாளிகளுக்கும் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்ப உத்தரவிடப்பட்டது.அதே சமயத்தில் விடுதலை செய்யப்பட்ட குற்றவாளிகளை மீண்டும் சிறையில் அடைக்க வேண்டும் என எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.