H-1B விசா மற்றும் குடியுரிமை சோதனைகளில் மாற்றங்களை ஏற்படுத்த டிரம்ப் நிர்வாகம் திட்டம்

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் நிர்வாகம் வெளிநாட்டு ஊழியர் விசா நடைமுறையில் மாற்றத்தைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது.
நல்ல திறன் கொண்ட வெளிநாட்டவர்கள் இதனால் பாதிக்கப்படலாம் என்று தொழில்நுட்ப நிறுவனங்கள் ஏற்கெனவே குரல் எழுப்பிய நிலையில் தற்போது டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
இதுகுறித்த தகவல்களை அமெரிக்காவின் குடியுரிமை மற்றும் குடிநுழைவுத் துறையின் தலைவர் ஜோசஃப் எட்லோ வெள்ளிக்கிழமை (ஜூலை 25) நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் தெரிவித்தார்.
தற்போது அமெரிக்கக் குடியுரிமைப் பெறுவதற்கான தேர்வு மிக சுலபமாக இருப்பதால் அதிலும் மாற்றத்தைக் கொண்டுவரவுள்ளதாக அவர் கூறினார்.
சட்டவிரோதக் குடியேற்றத்திற்கு எதிராக டிரம்ப் நிர்வாக எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் ஜோசஃப் விவரித்தார்.
H-1B விசா நடைமுறை நிறுவனங்களுக்கும் அமெரிக்கர்களுக்கும் அமெரிக்காவுக்கும் சாதகமாக இருக்க வேண்டும் என்பதையும் அவர் சுட்டினார்.
இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு அவர் சட்டவிரோதக் குடியேறிகளை நாடு கடத்துவதில் தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது.