உலக சுகாதார அமைப்பின் தொற்றுநோய் மறுமொழி சீர்திருத்தங்களிலிருந்து அமெரிக்கா விலகல்

உலக சுகாதார நிறுவனம் பெருந்தொற்றுத் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து 2024ஆம் ஆண்டு ஏற்றுக்கொண்ட மாற்றங்களை அமெரிக்கா நிராகரிப்பதாக அதிபர் டோனல்ட் டிரம்ப் நிர்வாகம் ஜூலை 18 தெரிவித்துள்ளது.அந்த மாற்றங்கள் நாட்டின் அரசுரிமையைக் கீழறுப்பதாக டிரம்ப் நிர்வாகம் சுட்டியது.
ஜனவரி 20ஆம் திகதி பதவிக்குத் திரும்பிய டிரம்ப் உலக சுகாதார நிறுவனத்திலிருந்து நாட்டை மீட்டுக்கொள்ளும் நடவடிக்கையை உடனடியாகத் தொடங்கினார்.
உலக சுகாதார நிறுவனம் செய்த மாற்றங்கள் சுகாதாரக் கொள்கையை வகுப்பதற்குத் தேசிய அரசுரிமையில் தேவையில்லாமல் தலையிடுவதாக வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவும் சுகாதார, மனிதச் சேவைகள் அமைச்சர் ரோபர்ட் எஃப் கென்னடி ஜூனியரும் குறிப்பிட்டனர்.
“எங்கள் நடவடிக்கைகள் அனைத்திலும் அமெரிக்கர்களுக்குத்தான் முன்னுரிமை அளிப்போம். அமெரிக்கர்களின் பேச்சுரிமை, அந்தரங்க, தனிப்பட்ட உரிமைகளுடன் தலையிடும் அனைத்துலக கொள்கைகளை ஏற்க மாட்டோம்,” என்று அவர்கள் கூட்டறிக்கை வெளியிட்டனர்.
ரூபியோவும் கென்னடியும் அனைத்துலக சுகாதாரக் கட்டுப்பாடுகளில் முன்வைக்கப்பட்ட திருத்தங்களைக் குறைகூறினர். 2024 ஜெனிவாவில் நடைபெற்ற உலக சுகாதாரக் கூட்டத்தின்போது ஒப்புக்கொள்ளப்பட்ட அந்தத் திருத்தங்கள் பெருந்தொற்றுகளைச் சமாளிக்க சட்ட ரீதியான அணுகுமுறையை வழங்குகிறது.“திருத்தங்களை நிராகரிக்க அமெரிக்க முடிவெடுத்தது வருத்தமளிக்கிறது,” என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனொம் கேப்ரியேசஸ் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டார்.
திருத்தங்கள் செய்யப்படுவதற்கு முன் உறுப்பு நாடுகளின் இறையாண்மை குறித்த நிலைப்பாட்டை நன்கு புரிந்திருந்ததாக அவர் கூறினார். மேலும் உலக சுகாதார நிறுவனம் எல்லைகள் மூடப்படுவதையோ அதுபோன்ற கட்டுப்பாடுகளையோ கட்டாயமாக்க முடியாது என்று திரு கேப்ரியேசஸ் விளக்கம் அளித்தார்.
திருத்தங்கள் பற்றிய மாற்றுக் கருத்துகளை முன்வைக்க நாடுகளுக்கு ஜூலை 19ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டது. பிரிட்டன், ஆஸ்திரேலியாவில் தடுப்பூசிக்கு எதிரானோர் திருத்தங்களை எதிர்த்து பேரணிகளை நடத்துகின்றனர்.
பெரும்பாலான நாடுகள் மே மாதம் உடன்பாட்டை உறுதிப்படுத்தின. அமெரிக்கா உலக சுகாதார நிறுவனத்திலிருந்து வெளியேறுவதில் கவனம் செலுத்துவதால் பங்கெடுக்கவில்லை.