அமெரிக்கா முழுவதும் இன்டெல் நிறுவனத்தில் 5,000க்கும் மேற்பட்டோர் பணிநீக்கம்

முன்னணி செமிகண்டக்டர் நிறுவனமான இன்டெல் நிறுவனம், இந்த மாதத்தில் சுமார் 5 ஆயிரம் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. கலிபோர்னியா, அரிசோனா,டெக்சாஸ் உள்ளிட்ட அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் பொறியாளர்கள், மூத்த நிர்வாகிகள், நிர்வாகப் பணியாளர்கள் ஆகியோர், இதில் அடங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, நடப்பு மாதம் தொழில்நுட்பத் துறையில் செய்யப்பட்டுள்ள மிகப்பெரிய பணிநீக்க நடவடிக்கைகளில் ஒன்றாகும்.
மைக்ரோசாப்ட் சமீபத்தில் 9 ஆயிரம் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்திருந்த நிலையில், அதைப் பின்பற்றி இன்டெல் நிறுவனமும் அத்தகைய நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. நிறுவனத்தின் மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பணிநீக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடுமையான சந்தைப் போட்டி, நிதி இழப்புகள் மற்றும் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறையில் பின்தங்கியது போன்ற காரணங்களால் இன்டெல் இந்த முடிவுகளை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.