இந்தோனேசியாவில் கடத்தப்பட்டு சிங்கப்பூரில் விற்கப்பட்ட சிசுக்கள் – அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

இந்தோனேசியாவில் கடத்தப்பட்ட ஆறு சிசுக்கள் அதிகாரிகளால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
அந்த குழந்தைகளில் 5 சிசுக்கள் சிங்கப்பூரில் விற்கப்படவிருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. மீதமுள்ள ஒரு சிசு இந்தோனேசியாவிற்கு கொண்டு செல்லப்படவிருந்தது.
பிறந்து 2 அல்லது 3 மாதங்களே ஆன இந்த ஆறு குழந்தைகளும், பாண்டுங் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2023ஆம் ஆண்டு முதல், குழந்தை கடத்தும் இந்தக் கும்பல் 24 சிசுக்களை விற்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதில் 15 சிசுக்கள் சிங்கப்பூருக்குக் கொண்டு செல்லப்பட்டதாக மேற்கு ஜாவா குற்ற விசாரணை துறை இயக்குநர் சுரவான் தெரிவித்தார்.
சிங்கப்பூருக்குப் போகவிருந்த ஐந்து சிசுக்களும் தத்தெடுப்பிற்காக அனுப்பப்பட்டதாக சந்தேக நபர்கள் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 12 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிங்கப்பூருக்குக் ஏற்கனவே அனுப்பப்பட்ட குழந்தைகள் குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.
கடத்தப்பட்ட ஒவ்வொரு குழந்தையும் பல மில்லியன் ரூப்பியாவிற்கு விற்கப்பட்டதாகவும், அம்மாக்களிடமிருந்து 11 முதல் 16 மில்லியன் ரூப்பியா வரை கொடுத்து குழந்தைகள் பெறப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவம் அடையாளம் தெரியாதோர் தம் குழந்தையைக் கடத்திச் சென்றதாக ஒரு பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பரிசோதிக்கப்படும்போது வெளிச்சத்துக்கு வந்தது.