ஒவ்வொரு 80 ஓவர்களுக்கும் 3 முறை பந்து மாற்றனும் – ஜோ ரூட் யோசனை

ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம் இழந்து மென்மையாக மாறுவது குறித்த சர்ச்சை எழுந்துள்ள நிலையில், இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் ஒரு புதிய யோசனையை முன்வைத்தார். ஒவ்வொரு அணிக்கும் 80 ஓவர்களுக்கு மூன்று முறை பந்து மாற்றுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார்.
இந்த யோசனை, லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் முடிவில், இந்திய அணி புதிய பந்து 10.3 ஓவர்களில் மாற்றப்பட்டதற்கு அதிருப்தி தெரிவித்ததைத் தொடர்ந்து வெளியிடப்பட்டது. ரூட், இந்த பரிந்துரையை முன்வைத்து பேசுகையில், “பந்து அடிக்கடி மாற்றப்படுவதைத் தவிர்க்க, ஒவ்வொரு அணிக்கும் 80 ஓவர்களுக்கு மூன்று முறை பந்து மாற்றக் கோரும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
இந்த முடிவு என்னைப்பொறுத்தவரை இது ஒரு நியாயமான தீர்வாக இருக்கும். பந்து தயாரிப்பாளர்கள் மீது முழு பொறுப்பையும் வைப்பதற்கு பதிலாக, சில நேரங்களில் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுவது இயல்பு. ஆனால், அடிக்கடி பந்து மாற்றக் கோருவதால் ஆட்டம் தாமதமாகிறது, இது தவிர்க்கப்பட வேண்டும்,” என்றார். மேலும், பந்து சரியான அளவிலான வளையங்களால் பரிசோதிக்கப்பட வேண்டும், அவை பெரியதாக இருக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்திய அணி, இரண்டாவது புதிய பந்து 10.3 ஓவர்களில் மாற்றப்பட்டபோது, அதற்கு மாற்றாக வழங்கப்பட்ட பந்து பழையதாக இருந்ததாகக் கூறி, நடுவர்களுடன் கடுமையான விவாதத்தில் ஈடுபட்டது. இந்தப் பந்து மீண்டும் 48 பந்துகளுக்குப் பிறகு மாற்றப்பட்டது, இது டியூக்ஸ் பந்து விரைவாக வடிவம் இழப்பது குறித்து கடந்த ஐந்து ஆண்டுகளாக எழுந்த விமர்சனங்களை மேலும் தீவிரப்படுத்தியது.
மேலும், தொடர்ந்து பேசிய ரூட், ஆட்ட நேரம் குறைவாக இருப்பது குறித்தும் பேசினார். முதல் நாளில் 7 ஓவர்களும், இரண்டாம் நாளில் 15 ஓவர்களும் குறைவாக வீசப்பட்டன. “ இது போன்ற சூழலில் ஆட்ட நேரத்தை முழுமையாக பயன்படுத்துவது கடினம். இங்கிலாந்தில் 30 டிகிரி வெப்பம் 45 டிகிரி போல உணரப்படுகிறது. ஆனால், ஆட்டத்தை சிறப்பாக நிர்வகிக்க முயற்சிக்க வேண்டும்,” என்றார்.
பும்ரா, பந்து மாற்றம் குறித்து பேசுகையில், “நான் இதை கட்டுப்படுத்த முடியாது. 2018 மற்றும் 2021 ஆகிய இங்கிலாந்து பயணங்களிலோ, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிகளிலோ இதுபோன்ற பந்து மாற்றங்கள் நினைவில் இல்லை. நான் கடுமையாக உழைத்து ஓவர்கள் வீசுகிறேன், ஆகவே சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தவிர்க்க விரும்புகிறேன், ஏனெனில் அது எனது போட்டிக் கட்டணத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம்,” என்று நகைச்சுவையாகக் கூறினார்.