இலங்கையில் டிஜிட்டல் கல்வித் திட்டம் – அமெரிக்காவில் இருந்து கிடைக்கும் உதவி

இலங்கையின் டிஜிட்டல் கல்வித் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளதாக கேட்ஸ் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
பிரதமர் ஹரிணி அமரசூரியவுடனான சந்திப்பின் போது, கேட்ஸ் அறக்கட்டளையின் உலகளாவிய மேம்பாட்டுத் தலைவர் கிறிஸ் எலியஸ் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் சிறுவர்களினதும், பெண்களினதும் ஊட்டச்சத்துத் தேவைகளை மேம்படுத்துதல், விவசாயத் துறையை மேம்படுத்துவதில் புதிய டிஜிட்டல் கருவிகளின் பயன்பாடு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில், கேட்ஸ் அறக்கட்டளை ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளதாகவும் கிறிஸ் எலியஸ் தெரிவித்தார்.
அத்துடன், பிராந்தியத்தில் டிஜிட்டல் தொழில்நுட்ப மேம்பாட்டை முன்னெடுப்பதில் அறக்கட்டளையின் பங்களிப்பு குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இந்தநிலையில், பாடசாலைகளில் மதிய உணவு வழங்குதல் தொடர்பான அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து, கேட்ஸ் அறக்கட்டளை பிரதிநிதிகளுக்குத் பிரதமர் தெளிவுபடுத்தியுள்ளார்.
அத்துடன், பிரதமரின் செயலாளர் தலைமையிலான டிஜிட்டல் கல்விப் பணிக்குழுவின் செயற்பாடுகள் குறித்தும் பிரதமர், கேட்ஸ் அறக்கட்டளை பிரதிநிதிகளுக்கு எடுத்துரைத்துள்ளார்.
இதேவேளை, பிரதமரின் கோரிக்கைக்கு ஏற்ப, டிஜிட்டல் கல்விப் பணிக்குழுவின் செயற்பாடுகளுக்கும், 2026 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கவிருக்கும் உத்தேச கல்விச் சீர்திருத்தத்திற்கும் ஒத்துழைப்பு வழங்குவதாக கேட்ஸ் பிரதிநிதிகள் பிரதமருக்கு உறுதியளித்துள்ளனர்.