டெல்லியில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் இருவர் பலி,எட்டு பேர் காயம்; மீட்புப் பணிகள் தீவிரம்

டெல்லியில் நான்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. சம்பவத்தில் இதுவரை இருவர் உயிரிழந்ததாகத் தகவல் வெளிவந்துள்ளது.
வடகிழக்கு டில்லியின் சீலம்பூர் பகுதியில் உள்ளது ஜனதா மஸ்தூர் காலனியில் அந்தக் குடியிருப்புக் கட்டடம் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) திடீரென இடிந்து விழுந்தது.
கட்டட இடர்பாடுகளுக்கு இடையே 12 பேர் வரை சிக்கி இருக்கக்கூடும் என்று இந்திய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
தற்போது மும்முரமாக நடைபெற்று வரும் மீட்புப் பணிகளில் இதுவரை குழந்தை உள்பட, எட்டுப் பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
மேலும் பலர் உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. கட்டடம் எப்படி இடிந்து விழுந்தது என்பது பற்றிய எந்த விவரங்களையும் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.
அந்தக் கட்டடத்தில் பத்து உறுப்பினர்கள் கொண்டுள்ள குடும்பம் ஒன்று தங்கி வந்ததை சுற்றியிருந்தவர்கள் தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
கட்டடம் இடிந்து விழுந்தது பற்றிய தகவல் சனிக்கிழமை காலை ஏழு மணிக்குக் கிடைத்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.