இலங்கை

தேசிய பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தொழிற்சங்கங்களுக்கான வாய்ப்பை தட்டிக்கழிக்கும் இலங்கை அரசு!

ஐக்கிய அமெரிக்கா இலங்கை மீது விதித்துள்ள வரிகளால் நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்குத் தீர்வாக மாற்று முன்மொழிவுகளை முன்வைக்க தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு வாய்ப்பளிக்கத் தவறியுள்ளதாக அரசாங்கம் கடுமையாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அமெரிக்க நிர்வாகத்தால் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு வரித்திட்டத்தை இலங்கை அரசாங்கம் முன்வைக்கும் என்பதில் தமக்கு சிறிதும் நம்பிக்கை இல்லை எனவும் இதன் விளைவுகள் இலங்கையின் தொழிலாளர்களை வெகுவாக பாதிக்கும் எனவும், கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொதுச் சேவைகள் ஊழியர் சங்கத்தின் இணைச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

‘விடுதலை நாள்’ என குறிப்பிடப்பட்டு 2025 ஏப்ரல் 2ஆம் திகதியன்று அறிவிக்கப்பட்ட உயர் வர்த்தக வரிகளை மூன்று மாதங்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்க டொனால்ட் ட்ரம்ப் நடவடிக்கை எடுத்தபோதும், ஜூலை 9 ஆம் திகதி முதல் அதனை மீண்டும் அமலுக்குக் கொண்டுவருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொதுச் சேவைகள் ஊழியர் சங்கத்தின் இணைச் செயலாளர் அன்டன் மார்கஸ் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு கோரப்பட்ட வாய்ப்பை இதுவரை அரசாங்கம் வழங்கவில்லை எனத் தெரிவிக்கிறார்.

“இது பாரதூரமான ஒரு பிரச்சினை. இது ஒரு தேசிய பிரச்சினை. ஏனென்றால் இதன் தாக்கம் தொழிலாளர்களை விசேடமாக பாதிக்கிறது. மட்டுமல்லாது ஏற்றுமதி துறையில் உள்ள அனைவரையும் பாதிக்கிறது. இறுதியில் இரு மக்களையும் பாதிக்கும்.”

உலகளாவிய வரி நெருக்கடி தொடர்பிலான மாற்று தீர்வுகளை முன் வைக்கும் சமூக இயக்கம் பெயரில் ஒன்றிணைந்த 29 அமைப்புகள் உடனடி முன்மொழிவுகளை உள்ளடக்கி இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்கு ஒரு நாளை ஒதுக்கி தருமாறு கடந்த மே மாதம் ஒரு கடிதத்தைச் சமர்ப்பித்தது.

முதலில் அதற்காக ஜூன் 20ஆம் திகதி ஒரு நேரத்தை ஒதுக்கியிருந்தாலும் அன்றைய தினம் முற்பகற்பொழுதில் ஜனாதிபதி செயலகத்திலிருந்து வந்த ஒரு தொலைபேசி அழைப்பினூடாக குறித்த சந்திப்பு மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதாக சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொதுச் சேவைகள் ஊழியர் சங்கத்தின் இணைச் செயலாளர் அன்டன் மார்கஸ் குறிப்பிடுகிறார்.

இதுவரைக்கும் அக்கலந்துரையாடலுக்காக தொழிற்சங்க தலைவர்களுக்கு எந்த விதமான வாய்ப்பையும் ஜனாதிபதி செயலகம் ஏற்படுத்தித் தரவில்லை.

வர்த்தக வரி குறித்த கலந்துரையாடல்களில் அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த ஐக்கிய அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட குழுவில் எந்தவொரு தொழிலாளர் பிரதிநிதியும் இடம்பெறவில்லை எனக் குற்றஞ்சாட்டிய தொழிற்சங்கத் தலைவர், ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட்ட கடிதத்தில் முதன்மையாகக் குறிப்பிடப்பட்டிருந்த விடயம் வரிக் கட்டணப் பிரச்சினையை ஒரு தேசிய பிரச்சினையாகக் கருதி, தொடர்புடைய அனைத்து பங்குதாரர்களையும் உள்ளடக்கிய ஒரு தேசியக்குழுவை அமைக்க வேண்டும் கோரிக்கையாகும் எனக் குறிப்பிட்டார்.

“இது ஒரு தேசிய பிரச்சினை. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும்போது அனைத்துப் பங்குதாரர்களையும் உள்ளடக்கிய தேசிய குழு ஒன்றை அரசாங்கம் நியமிக்க வேண்டும் என நாம் குறிப்பிட்டோம்.”

ட்ரம்பின் வர்த்தக வரிகள் காரணமாக எந்த ஒரு தொழிலாளருக்கும் தொழில் இல்லாமல் போகாது என அரசாங்கம் ஒரு கொள்கை ரீதியான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும், ஏதேனும் ஒரு நிறுவனத்தை நடத்திச் செல்ல முடியாத நிலைமை தோன்றுமானால் அந்த நிறுவனத்துக்கு நிவாரணம் வழங்கும் ஒரு கொள்கையை அரசாங்கம் கைக்கொள்ள வேண்டும் எனவும் உலகளாவிய வரி நெருக்கடி தொடர்பிலான மாற்று தீர்வுகளை முன் வைக்கும் சமூக இயக்கம் அக்கடிதத்தின் ஊடாக ஜனாதிபதியிடம் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியின் வர்த்தக வரிகள் தொடர்பில் இலங்கைக்கு சாதகமானதொரு தீர்வு கிடைக்கப்பெறும் என அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை இந்நாட்களில் கேட்கக் கூடியதாக இருந்தாலும் கிடைக்கவுள்ள சாதகமான தீர்வுகள் எவை என வினவும் சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவர் அன்டன் மார்கஸ் அத்தீர்வானது இலங்கை முன்வைக்கும் தீர்வை அடிப்படையாகக் கொண்டதாகவே அமையும் என வலியுறுத்திக் கூறினார்.

நாட்டு மக்களுக்கு அரசாங்கத்தின் முன்மொழிவுகள் எவை என்பது குறித்து அறிந்துகொள்வதற்கான உரிமை இருந்தபோதிலும் அரசாங்கம் அம் முன்மொழிவுகள் எவை என அறிவிக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டும் சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொதுச்சேவைகள் ஊழியர் சங்கத்தின் இணைச் செயலாளர் ஜுன் 07ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தமக்கு அமெரிக்கா திருப்தியடையக்கூடிய ஒரு முன்மொழிவை அரசாங்கம் முன்வைக்கும் என்ற நம்பிக்கை அறவே இல்லை எனக் குறிப்பிட்டார்.

அரசாங்கம் ஒரு கலந்துரையாடலுக்குத் தயார் என்றால் உலகளாவிய வரி நெருக்கடி தொடர்பிலான மாற்று தீர்வுகளை முன் வைக்கும் சமூக இயக்கம் என்ற வகையில் முன்மொழிவுகளை முன்வைக்க முடியும் எனவும் அது தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து சாதகமான பதில் எதுவும் கிடைக்காத பட்சத்தில் அம் முன்மொழிவுகளை மக்களிடம் கொண்டு செல்வதாகவும் அவர் உறுதியாகக் கூறியுள்ளார்.

“இதனால் பாதகமான விளைவுகள் ஏற்படும் என்பதை நாம் தெளிவாக கூறுகிறோம். அரசாங்கம் அதற்கான ஆயத்தங்களை மேற்கொள்வதற்கு தயாராக இல்லை என்றால், எமக்கு இந்நாட்டின் தொழிற்சங்கங்கள் பொதுமக்கள் அமைப்புகள் மற்றும் மகளிர் அமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து செயற்பட நேரிடும். இந்நெருக்கடியின் விளைவுகளை தொழிலாளர்கள் மீதும் பொதுமக்கள் மீதும் சுமத்துவதற்கு முயற்சித்தால் சமூக அமைப்பு என்ற வகையில் மக்களை இதற்காக தயார்படுத்தி தெளிவுபடுத்தி அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு நாம் தயார் என்பதைக் கூறிக் கொள்ள விரும்புகிறோம்.” என அன்டன் மார்கஸ் மேலும் குறிப்பிட்டார்.

அதேவேளை அமெரிக்க தீர்வை வரிகள் தொடர்பில் இலங்கைக்கு சாதகமான பதில் கிடைக்கப்பெறும் என தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

(Visited 1 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
Skip to content