நேப்பாள-சீன எல்லையில் கனமழை காரணமாக நிலச்சரிவு ;18 பேர் மாயம்

சீனாவின் டிபெத் பகுதியில் கனமழை காரணமாக போட்டே-கோஷி ஆறில் நிலச்சரிவு ஏற்பட்டது.இது சீனா, நேப்பாளம் இரு நாடுகளையும் இணைக்கும் பாலத்தை அடித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது என்று அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) தெரிவித்தனர். அத்துடன், பலர் காணாமல் போய்விட்டதாகவும் கூறப்படுகிறது.
நேப்பாளத்தில் குறைந்தது 18 பேர் காணாமல் போயிருப்பதாகக் கூறப்படும் நிலையில் எல்லையோர சீனப் பகுதியில் 11 பேரைக் காணவில்லை என்று சீனாவின் செய்தி நிறுவனம் கூறியது.
இதில் நேப்பாளத்தில் காணாமல் போனவர்களில் அறுவர் சீன ஊழியர்களும் மூவர் காவல்துறை அதிகாரிகளும் அடங்குவர் என நேப்பாளத்தின் தேசியப் பேரிடர் அபாய நிர்வகிப்பு ஆணையம் எக்ஸ் தளத்தில் தெரிவித்தது. இவர்களுடன் எட்டு மின்சார வாகனங்களைக் காணவில்லை என்றும் வெள்ளத்தால் ஒரு சிறிய நீர்மின் நிலையத்துக்கு சேதம் ஏற்பட்டதாகவும் ஆணையம் கூறியது.
வெள்ளத்தால் காணாமல் போன மூன்று சீன ஊழியர்கள் நேப்பாளத் தலைநகர் காட்மாண்டுவில் இருந்து 80 கிலோமீட்டர் வடக்கே உள்ள கொள்கலன் தயாரிக்கும் பணிமனையில் வேலை பார்த்து வந்தனர் என்று நேப்பாளத்தின் ரசுவா வட்டாரத்தைச் சேர்ந்த மூத்த நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.
அந்த ஆற்று வெள்ளம் சீனாவிலிருந்து இறக்குமதியான பொருள்களைக் கொண்ட சில கொள்கலன்களையும் அடித்துச் சென்றுவிட்டதாக அந்த அதிகாரி விளக்கினார்.
வெள்ளத்தால் பெரும் சொத்துச் சேதம் ஏற்பட்டுள்ளது என்றும் இது குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் அவர் கூறினார்.இதுவரை நேப்பாள ராணுவம் 11 பேரைக் காப்பாற்றியுள்ளதாகவும் மற்றவர்களைத் தேடி, மீட்கும் பணி தொடர்வதாகவும் ராஜா ராம் பாஸ்நெட் என்ற பேச்சாளர் தெரிவித்தார்.
அண்மைய காலங்களில் சாலைகள் அமைப்பது, எரிசக்தி ஆலைகள், மருத்துவமனைகள் அமைப்பது என நேப்பாளத்தில் சீனா தனது முதலீட்டை அதிகரித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.