இந்தியா- அதீத மூடநம்பிக்கையால் ஐந்து பேரை அடித்துக்கொன்று தீ வைத்த ஊர்மக்ககள்

மாந்திரீக வேலைகளில் ஈடுபடுவதாக எண்ணி, பாபு லால் என்பவரின் குடும்பத்தினர் ஐந்து பேரை அந்த ஊர்க்காரர்கள் சாகும்வரை அடித்து உதைத்து, அவர்களின் உடல்களை அவர்களின் வீட்டிற்குள் போட்டு, அந்த வீட்டைத் தீ வைத்துக் கொளுத்தியுள்ளனர்.
இதில் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரின் உடல்களும் தீயில் கருகின. இந்தக் கொடூரச் சம்பவம் பீகார் மாநிலத்தின் பூர்ணியா மாவட்டத்திலுள்ள டகொமா என்னும் சிற்றூரில் நிகழ்ந்துள்ளது.
பாபு லால் மாந்திரீகத்தால் அந்த ஊரில் பல அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதாக நம்பி ஊர்மக்கள் இந்தக் கொடூரச் செயலைச் செய்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் ஒரு குழந்தை மட்டும் உயிர் பிழைத்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து கொல்லப்பட்டவர்களின் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக அந்த ஊரைச் சேர்ந்த ஒருவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். எஞ்சியவர்களை கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தக் கொடூர சம்பவம் அப்பகுதியில் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது