தைவானைத் தாக்கி இருவரைக் கொன்ற பின்னர்,சீனா நோக்கி விரையும் டானாஸ் புயல்

செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) காலை நிலவரப்படி சீனாவின் கிழக்குக் கடலோரப் பகுதியை நோக்கி டானாஸ் புயல் விரைகிறது.
இதற்கு முன்பு அப்புயல் தைவானைப் புரட்டி எடுத்தது. புயல் காரணமாக தைவானில் இதற்கு முன் இல்லாத அளவுக்குக் கனமழையும் பலத்த காற்றும் வீசியது. இதன் விளைவாக இருவர் உயிரிழந்தனர். 600க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் விரையும் டானாஸ் புயல், சீனாவின் துறைமுக நகரமான டாய்சோவில் கரையைக் கடக்கும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
இதனால் பயணிகள் கப்பல் சேவைகளைச் சீனக் கடல்துறை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. 100க்கும் அதிகமான கப்பல் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மோசமான வானிலையால் சீனாவுக்குப் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்குப் பருவநிலை மாற்றம் காரணம் என்று வானிலை நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையே, சீனாவின் சீஜியாங் நகரில் திடீர் வெள்ளம் ஏற்படக்கூடும் என்று அந்நகரைச் சேர்ந்த அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) எச்சரிக்கை விடுத்தனர்.
சீஜியாங்கை அடுத்து, ஜியாங்சி மாநிலத்தை டானாஸ் புயல் புரட்டி எடுக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. மலைகள் அதிகம் இருக்கும் மாநிலத்தில் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய வெள்ளம் பெருக்கெடுத்து ஓடக்கூடும் என்று கூறப்படுகிறது.