பர்மிங்ஹாம் வெற்றியால் சுப்மன் கில் பெருமிதம்

‘பர்மிங்ஹாம் டெஸ்ட் வெற்றி, நான் ஓய்வு பெறும் போது இனிய நினைவுகளை தரும்,” என சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (‘ஆண்டர்சன் – சச்சின் டிராபி’) பங்கேற்கிறது. ரோகித், கோலி, அஷ்வின் என பல ‘சீனியர்கள்’ ஓய்வு பெற்ற நிலையில் 25 வயதான சுப்மன் கில், டெஸ்ட் அணிக்கு தலைமை ஏற்றார்.
முதல் போட்டியில் இங்கிலாந்து வென்றது.
பர்மிங்ஹாம், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் பேட்டிங்கில் அசத்திய கேப்டன் சுப்மன் கில் 430 ரன் (267+163) குவித்து, வெற்றிக்கு வித்திட்டார்.
சுப்மன் கில் 25, கூறியது:
பர்மிங்ஹாம் வெற்றி மறக்க முடியாதது. கிரிக்கெட் வாழ்க்கையில் மீதமுள்ள நாட்களில் இது என்றும் நினைவில் நிலைத்து நிற்கும். நான் ஓய்வு பெற்றாலும் இது தொடரும். கடைசி விக்கெட்டை நான் ‘கேட்ச்’ செய்து, போட்டியை முடித்து வைத்துள்ளேன். அடுத்து 3 போட்டிகள் மீதமுள்ள நிலையில் 2வது போட்டியில் வென்றது உற்சாகம் தரும்.
பேட்டிங், பவுலிங் என அணி வீரர்கள் ஒவ்வொரும், வெவ்வேறு தருணங்களில், வெற்றிக்கு தங்கள் பங்களிப்தை தந்துள்ளனர். இது தான் சாம்பியன் அணியை உருவாக்கும். இதற்கான சிறந்த அறிகுறியாக, இந்த வெற்றி அமைந்துள்ளது.
ஒரு டெஸ்டில் வெற்றி பெறுவது எவ்வளவு கடினம் என்பதை கடந்த 6 முதல் 8 மாதங்கள் நன்றாக எனக்கு உணர்த்தியது. இதுவரை எட்ஜ்பாஸ்டனில் வென்றதே இல்லை என்ற சூழலில், தற்போது வெற்றி பெற்றது எவ்வளவு சிறப்பானது.
இதுபோன்ற பேட்டிங்கிற்கு சாதகளான ஆடுகளங்களில் கூடுதலாக பேட்டர் தேவை என்பதால் வாஷிங்டன் சுந்தருடன் களமிறங்கினேன். குல்தீப்பை சேர்க்க முடியவில்லை. நானும், வாஷிங்டன் சுந்தரும் அமைத்த ‘பார்ட்னர்ஷிப்’ (141 ரன்) மிக முக்கியம். இது, மனதளவில் இங்கிலாந்துக்கு நெருக்கடி கொடுத்தது என இவ்வாறு அவர் கூறினார்.