காசாவில் அதிகமானோர் கொல்லப்படுவதால்,போர்நிறுத்த உத்தரவாதங்களை கோரியுள்ள ஹமாஸ்

போர் நிறுத்த உத்தரவாதங்களை ஹமாஸ் கோரியுள்ளது. அமெரிக்க ஆதரவுடன் புதிய போர் நிறுத்த பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இப்பரிந்துரைகள் போரை முடிவுக்குக் கொண்டு வரும் என்ற உத்தரவாதம் தரப்பட வேண்டும் என ஹமாஸ் வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில், காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் பாலஸ்தீனர்கள் பலர் உயிரிழந்ததாக மருத்துவ உதவியாளர்கள் கூறினர்.
வியாழக்கிழமையன்று (ஜூலை 3) இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 59 பேர் உயிரிழந்ததாக காஸா சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.இருப்பினும், போர் நிறுத்த உடன்படிக்கை எட்டப்படுவதற்கான சாத்தியம் அதிகமாக இருப்பதாக இஸ்ரேலிய அதிகாரிகள் கூறினர்.
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் போராளி அமைப்புக்கு இடையே போர் வெடித்து கிட்டத்தட்ட 21 மாதங்கள் ஆகிவிட்டன.அண்மையில் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் மூண்டது.இரு நாடுகளும் மாறி மாறி ஏவுகணைகள் பாய்ச்சின.இது 12 நாள்களுக்கு நீடித்தது. இதையடுத்து, அவ்விரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
இஸ்ரேல், ஈரான் இடையிலான போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதும் காஸா போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை சூடுபிடித்துள்ளது.ஹமாசுடனான 60 நாள் போர் நிறுத்த உடன்படிக்கை எட்ட முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளை இஸ்ரேல் ஏற்றுகொண்டதாக ஜூலை 1ல் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்தார்.
இந்நிலையில், போர் நிறுத்தம் போரை முடிவுக்குக் கொண்டு வரும் என்ற உத்தரவாதம் தரப்பட வேண்டும் என்று ஹமாஸ் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பான விவரங்கள் குறித்து ஆராயப்படுவதாக இஸ்ரேலிய அதிகாரிகள் இருவர் தெரிவித்தனர்.
போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை கத்தாரும் எகிப்தும் வழிநடத்தி வருகின்றன.போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டால் இரண்டு மாத போர் நிறுத்த உடன்படிக்கையை ஏற்க ஹமாசை ஊக்குவிக்கலாம் என்று எகிப்திய அதிகாரிகள் கூறினர்.இப்படி இருக்க, ஹமாஸ் போராளி அமைப்பு வேரோடு அழிக்கப்படும் என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு சூளுரைத்தார்.