அமெரிக்காவில் விமானத்தில் சக பயணியை தாக்கிய இந்திய பிரஜை கைது!

அமெரிக்க விமானத்தில் சக பயணி ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜூன் 30 அன்று பிலடெல்பியாவிலிருந்து மியாமிக்கு ஃபிரான்டியர் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் பயணித்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இஷான் சர்மா (21), தனக்கு முன்னால் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்த கீனு எவன்ஸைத் தாக்கினார். இருவரும் ஒருவரையொருவர் கழுத்தைப் பிடித்து சண்டையிடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இஷான் சர்மாவின் நடத்தை விசித்திரமானது என்றும் தன்னை மிரட்டியதாகவும் கீனு எவன்ஸ் போலீசாரிடம் தெரிவித்தார்.
சர்மா தன்னை மிரட்டுவதை நிறுத்தாதபோது தான் உதவிக்கான பொத்தானை அழுத்தியதாகவும், அதன் பிறகு சர்மா தன்னை தாக்கி தொண்டையைப் பிடித்ததாகவும் எவன்ஸ் விளக்கினார். தற்காப்புக்காக தான் எதிர்த்துப் போராட வேண்டியிருந்தது என்று அவர் கூறினார்.
விமானம் மியாமியில் தரையிறங்கியவுடன் இஷான் சர்மாவை போலீசார் கைது செய்தனர். அவர் மீது தாக்குதல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இருப்பினும், நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது, சர்மாவின் வழக்கறிஞர், தனது கட்சிக்காரர் தனது மத நம்பிக்கைகளின்படி தியானம் செய்வது எவன்ஸ்க்கு பிடிக்கவில்லை என்றும், அதனால்தான் சண்டை வெடித்ததாகவும் கூறினார். இந்த சம்பவம் குறித்த விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.