குஜராத்தின் பனஸ்கந்தா எல்லைப்பகுதி வழியாக ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதி சுட்டுக்கொலை
																																		குஜராத்தின் பனஸ்கந்தா எல்லைப்பகுதி வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதியை எல்லை பாதுகாப்பு படையினர் மே 23ஆம் திகதி நள்ளிரவில் சுட்டுக்கொன்றனர்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்திய ராணுவம் எல்லைப் பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்த அவர் இரவு நேரத்தில், அனைத்துலக எல்லையைக் கடந்து ஊடுருவ முயற்சி செய்ததை எல்லை பாதுகாப்பு படையினர் கண்டறிந்தனர். எல்லை பாதுகாப்பு படையினரின் எச்சரிக்கையை மீறி அவர் இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அந்த பயங்கரவாதிமீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அவர் சுட்டு வீழ்த்தப்பட்ட தகவலை எல்லைப் பாதுகாப்பு படையினர் மே 24ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டனர்.
இதற்கிடையே, குஜராத்தின் கட்ச் பகுதியில், பாகிஸ்தான் உளவாளி ஒருவரை பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் கைது செய்தனர். உளவாளி பாகிஸ்தானுக்கு முக்கிய தகவல்களைப் பகிர்ந்தது விசாரணையில் அம்பலமானது.
அவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
        



                        
                            
