ராஜதந்திர நெருக்கடிக்கு மத்தியில் இந்தியாவுடனான ரூ.180 கோடி பாதுகாப்பு ஒப்பந்தத்தை ரத்து செய்த பங்களாதேஷ்

இந்தியாவுடன் செய்துகொள்ளப்பட்ட 180.25 கோடி ரூபாய் தற்காப்புக் குத்தகையை பங்ளாதேஷ் ரத்து செய்துவிட்டது.
இந்தியாவுக்கும் பங்ளாதேஷுக்கும் இடையிலான அரசதந்திர உறவில் உரசல் நீடித்து வரும் வேளையில், பங்ளாதேஷ் அரசாங்கம் அந்த நடவடிக்கையை எடுத்து உள்ளது.
இந்தியாவின் தற்காப்பு அமைச்சின்கீழ் கார்டன் ரீச் ஷிப்பில்டர்ஸ் அண்ட் எஞ்சினியரிங் (GRSE) என்னும் பொதுத் துறை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கோல்கத்தாவில் உள்ள அந்த நிறுவனம் தற்காப்புக்கான விமானங்களைத் தயாரித்து வழங்குகிறது.
நவீன இழுவைக் கப்பல் ஒன்றைத் தயாரிப்பதற்கான குத்தகையை பங்ளாதேஷ் அரசாங்கம் அந்த நிறுவனத்துக்கு வழங்கி இருந்தது. நீண்ட தூரத்தில் சிக்கியுள்ள படகுகளைக் கரைக்கு இழுத்துக் கொண்டு வந்து மீட்கும் பணிக்குத் தேவையான அனைத்து நவீன தொழில்நுட்பங்களும் அந்தக் கப்பலில் இருக்கும்.
குத்தகையைப் பெற்ற இந்திய அரசு நிறுவனம், அதனை நிறைவேற்றுவதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வந்த நிலையில் திடீரென்று அந்தக் குத்தகையை பங்ளாதேஷ் ரத்து செய்துவிட்டது.
குத்தகையை பங்ளாதேஷ் அரசாங்கம் ரத்து செய்த தகவலை இந்திய நிறுவனம் பங்குச் சந்தை நிர்வாகத்திடம் தெரிவித்து உள்ளது.
இந்திய அரசாங்கம் அண்மையில் பங்ளாதேஷின் நிலவழி இறக்குமதிகளை தடை செய்ததற்குப் பதிலடியாக பங்ளாதேஷ் அந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அரசியல் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.
நில எல்லைகள் வழி பங்ளாதேஷிலிருந்து வரும் இறக்குமதிகளுக்கு இந்தியா மே 17ஆம் திகதி தடை விதித்தது.அந்தத் தடை காரணமாக, பங்ளாதேஷில் தயாராகும் ஆயத்த ஆடைகள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள், பிளாஸ்டிக் பொருள்கள், மரத்தால் ஆன நாற்காலி, மேசை போன்ற பொருள்களை சாலை வழியாக இந்தியாவிற்கு கொண்டு வர முடியாது.
கோல்கத்தா மற்றும் மும்பை துறைமுகங்கள் வாயிலாக மட்டுமே பங்ளாதேஷின் ஆயத்த ஆடைகளை இறக்குமதி செய்ய இந்திய அரசாங்கம் அனுமதிக்கிறது.ஏற்கெனவே, ஏப்ரல் மாதத் தொடக்கத்தில், பங்ளாதேஷுக்கு வழங்கப்பட்ட ‘டிரான்ஸ்ஷிப்மென்ட்’ (இந்தியா வழியாக பிற நாடுகளுக்கு பொருள்களை ஏற்றுமதி செய்வது) வசதியையும் இந்தியா திரும்பப் பெற்றது.
பங்ளாதேஷ் அரசின் இடைக்கால தலைமை ஆலோசகர் முஹம்மது யூனுஸ் அண்மையில் சீனா சென்றிருந்தார். அப்போது அவர் இந்தியாவுக்கு எரிச்சலூட்டும் வகையில் சில கருத்துகளைத் தெரிவித்து இருந்தார்.
இந்தியாவின் ஏழு வடகிழக்கு மாநிலங்கள் நிலத்தால் முற்றிலும் சூழப்பட்ட பகுதிகள் எனக் குறிப்பிட்டதோடு, அந்த வட்டாரத்தின் ஒரே கடல்பகுதிப் பாதுகாவலர் பங்ளாதேஷ்தான் என்று அவர் கூறியிருந்தார்.அத்துடன், இந்தியாவின் அந்தப் பகுதிகளில் பொருளியல் நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு சீனாவிடம் யூனுஸ் வேண்டுகோள் விடுத்திருந்தார்.அப்போது முதல் இந்திய-பங்ளாதேஷ் உறவில் விரிசல் ஏற்பட்டு வருகிறது.