இலங்கையில் கொரோனா நோயாளிகள் அதிகரிக்கக்கூடும் – எச்சரிக்கும் வைத்தியர்கள்!

சுவாச நோயைப் போன்று எதிர்காலத்தில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடுமென சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் அதுல லியனபத்திரண தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று (22) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டார்.
கடந்த சில வாரங்களாக சில ஆசிய வலய நாடுகளில் கொரோனா நோயாளர்களின் அதிகரிப்பை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. கொரோனாவின் உப திரிபே இவ்வாறு பரவலடைந்து வருவதாக தகவல்கள் உறுதிப்படுத்தியிருந்தன.
மேலும், இது மிகவும் பாரதூரமான நோய் அறிகுறிகளை ஏற்படுத்தும் திரிபாக அடையாளப்படுத்தப்படவில்லை.
இலங்கையிலும் 20 வரையான வைத்தியசாலைகளில் சுவாச நோய் தொடர்பான கண்காணிப்புக் கட்டமைப்பொன்றை முன்னெடுத்து வருகிறோம். அதனூடாக இன்புளுவென்சா போன்ற கொரோன நோயும் பரிசீலனைக்கு உட்படுத்தப்படும்.
நாளாந்தம் வைத்திசாலைகளிலிருந்து நோயர்களின் பரிசோதனை மாதிரிகள் கிடைக்கப்பெறுகின்றன. அந்தத் தரவுகளின் அடிப்படையில் இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. அதனால் மக்கள் இது தொடர்பில் அவசியமின்றி அச்சம் கொள்ளவேண்டியதில்லை.
ஆயினும், சுவாச நோயை போன்று எதிர்காலத்தில் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும். சுகாதார அதிகாரிகள் என்ற அடிப்படையில் அது தொடர்பில் தொடர்ச்சியாக அவதானத்துடனேயே செயற்பட்டு வருகின்றோம்.
கொரோனா நிலை அதிகரிக்கும் பட்சத்தில் அது தொடர்பான தகவல்களை வழங்குவோம். அதனை எதிர்கொள்வதற்கு எமது வைத்தியசாலைக் கட்டமைப்புக்கள், இரசாயன ஆய்வுகூட கட்டமைப்புகள், பயிற்சிபெற்ற சுகாதார சேவையாளர்கள் தயார் நிலையிலேயே இருக்கிறார்கள். என்றார்