பிளே ஆப் சென்ற மும்பை….. டெல்லியை வீழ்த்தியதற்கு முக்கிய காரணங்கள்

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், டெல்லி அணியும் மோதியது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 20 ஓவர்கள் முடிவில் 180 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்ததாக 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி களமிறங்கியது.
தொடக்கத்தில் இருந்தே தடுமாறி விளையாடி வந்த டெல்லி 18.2 ஓவர்கள் முடிவில் தங்களுடைய அனைத்து விக்கெட்களையும் இழந்து 121 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. எனவே, மும்பை அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. டெல்லியை வீழ்த்தியதன் மூலம், மும்பை அணி நேரடியாக பிளேஆஃப்களுக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி மும்பை வெற்றி பெற சில வீரர்கள் பங்கு மிகவும் முக்கியமானது என்று சொல்லலாம். எனவே, டெல்லி கேபிட்டல்ஸை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி IPL 2025 பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றதற்கு முக்கிய காரணங்கள் பற்றி பார்ப்போம்.
சூர்யகுமார் யாதவ் பேட்டிங்
நேற்று நடந்த போட்டியில் மும்பை அணி பந்துவீச்சாளர்கள் எந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட்டார்களோ அதைப்போலவே மும்பை அணியில் சூர்யகுமார் யாதவ் கடைசி வரை நின்று நல்ல டார்கெட்டை டெல்லி அணிக்கு வைத்தார் என்று தான் சொல்லவேண்டும். ஏனென்றால், மும்பை அணியில் தொடர்ச்சியாக விக்கெட் விழுந்த நிலையில் குறைவான ரன்களில் அணி சுருண்டுவிடும் என பலரும் எதிர்பார்த்தனர்.
ஒரு கட்டத்தில் அணி 16.5 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அந்த சமயத்தில் சூர்யகுமார் யாதவ் களத்தில் நின்று கடைசி வரை அதிரடியாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 180 ரன்களுக்கு அணியை கொண்டு சென்றார். இந்த டார்கெட் வைத்த காரணத்தால் தான் டெல்லி அணிக்கு ஒரு சிறந்த இலக்கையும் வைக்க முடிந்தது.
மிட்செல் சான்டனரின் அபார பந்துவீச்சு
பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ் என்றால் பந்துவீச்சில் மிட்செல் சான்டனரின் அபார பந்துவீச்சு ஒரு முக்கிய காரணம் என்று சொல்லலாம். 4 ஓவர்களில் 11 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லியின் ரன்ரேட்டை கட்டுப்படுத்தினார்.
ஜஸ்ப்ரீத் பும்ராவின் தாக்கம்
அவரைப்போலவே, ஜஸ்ப்ரீத் பும்ராவின் தாக்கம் என்பது மிகவும் முக்கியமானது என்று சொல்லலாம். ஏனென்றால், பும்ராவின் வேகமான மற்றும் துல்லியமான பந்துவீச்சு டெல்லி பேட்ஸ்மேன்களை திணறடித்து, அவர்களை 18.2 ஓவர்களில் 121 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தது. அவரும் 3 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியிருந்தார். இவர்களுடைய சிறப்பான பங்களிப்பு காரணமாக தான் டெல்லி அணியை வீழ்த்தி மும்பை பிளே ஆப் சுற்றுக்கு சென்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.