இந்தியா – ஏழு மாதங்களில் 25 ஆண்களை மணந்த பெண்; கைது செய்த பொலிஸார்

இந்தியாவில் கடந்த ஏழு மாதங்களில் மட்டும் 25 ஆண்களைத் திருமணம் செய்து ஏமாற்றிய 23 வயதுப் பெண்ணை ராஜஸ்தான் மாநிலக் காவல்துறை கைதுசெய்துள்ளது.
‘தாலி கட்டியபின் கம்பி நீட்டும் மணமகள்’ எனக் காவல்துறையால் குறிப்பிடப்படும் அனுராதா பாஸ்வான் என்ற அப்பெண், மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் திங்கட்கிழமை (மே 19) பிடிபட்டார்.
அதிநவீன மோசடிக் கும்பலைச் சேர்ந்தவரான அனுராதா, திருமணத்திற்காக ஏங்கும் ஆண்களை குறிவைத்துச் செயல்பட்டதாகச் சொல்லப்படுகிறது. திருமணம் முடிந்ததும் சில நாள்களில் நகை, பணம். மின்னணுக் கருவிகள் போன்ற விலைமதிப்புமிக்க பொருள்களுடன் ஓட்டம் பிடிப்பதை அவர் வாடிக்கையாகக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
ராஜஸ்தானின் சவாய் மாதோபூர் நகரைச் சேர்ந்த விஷ்ணு சர்மா என்பவர் இம்மாதம் 3ஆம் திகதி அளித்த புகாரைத் தொடர்ந்து இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது.
பொருத்தமான பெண்ணைப் பார்த்துத் தருவதாகக் கூறியதை அடுத்து, சுனிதா, பப்பு மீனா என்ற இரு திருமணத் தரகர்களுக்கு ரூ.200,000 (S$3,026) வழங்கியதாகத் விஷ்ணு தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
சொன்னதுபோல அவர்கள் இருவரும் அனுராதாவை மணப்பெண்ணாகக் காட்டினர். அதனைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி விஷ்ணு – அனுராதா திருமணம் நடந்தது. பின்னர் மே 2ஆம் தேதி விலைமதிப்புமிக்க பொருள்களுடன் அனுராதா தலைமறைவானார்.
உத்தரப் பிரதேசத்தின் மகராஜ்கஞ்சில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்த அனுராதா, குடும்பச் சண்டை காரணமாக கணவரைப் பிரிந்து, போபாலுக்கு இடம்பெயர்ந்தார். அங்கு, உள்ளூர்த் திருமணத் தரகர்கள் இடம்பெற்றிருந்த மோசடிக் கும்பலுடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது.
வாட்ஸ்அப் வழியாக மணப்பெண்ணைக் காட்டும் அத்தரகர்கள், தங்கள் சேவைக்காக ரூ.200,000 முதல் ரூ.500,000 வரை பெற்றுக்கொள்வர். திருமணம் முடிந்ததும் சில நாள்களில் மணப்பெண் மாயமாகிவிடுவார்.
விஷ்ணுவின் வீட்டிலிருந்து தப்பியோடிய பின்னர் போபாலைச் சேர்ந்த கப்பார் என்பவருடன் அனுராதாவிற்குத் திருமணம் நடந்தது. அதற்காக அவரிடமும் ரூ.200,000 பெற்றதாகச் சொல்லப்படுகிறது.
காவல்துறை அனுராதாவைப பொறிவைத்துப் பிடித்தது. காவலர் மணமகன் என்ற போர்வையில் காவலர் ஒருவர் திருமணத் தரகரை அணுகினார். அந்தத் தரகர் அனுராதாவின் புகைப்படத்தைப் பகிர்ந்துகொள்ள, அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அனுராதாவைக் காவல்துறை கைதுசெய்தது.